அகமதாபாத் : குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணியின் நட்சத்திர வீரர் ரோகித் சர்மா ஃபீல்டிங் செய்யும் போது களத்தில் கொஞ்சம் கூட உற்சாகமின்றி காணப்பட்டது அவரது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 3 சீசன்களில் மும்பை அணியால் ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியவில்லை. இதனால் குஜராத் அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு வந்த ஹர்திக் பாண்டியாவை மும்பை அணி நிர்வாகம் ஒப்பந்தம் செய்தது. இதனால் ரோகித் சர்மாவை கேப்டன்சியில் இருந்து பதவி நீக்கம் செய்து அதிர்ச்சி கொடுத்தது. இதுகுறித்து ரோகித் சர்மா இதுவரை எந்த கருத்தும் கூறவில்லை.

அதேபோல் ரோகித் சர்மா ரசிகர்கள் பலரும் ஹர்திக் பாண்டியா மற்றும் மும்பை அணி நிர்வாகத்தை சோசியல் மீடியாவில் பொளந்து கட்டி வந்தனர். இந்த நிலையில் அகமதாபாத் மைதானத்தில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி களமிறங்கியது. அப்போது டாஸ் போடப்பட்ட நிலையில், ஹர்திக் பாண்டியா பெயரை சொன்ன போது மொத்த மைதானமும் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள்.
இதன்பின் களத்தில் ரோகித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா இடையிலான உரையாடல் எப்படி இருக்கும் என்பதே மும்பை ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. வழக்கம் போல் இவர்கள் இடையே எந்த வித பிரச்சனையும் இல்லாமல் களத்தில் உரையாடினார்கள். ஆனால் ரோகித் சர்மாவின் ஃபீல்டிங் பொசிஷன் மட்டும் மாறிக் கொண்டே இருந்தது அனைவருக்கும் கண்கூடாக தெரிந்தது.
வழக்கமாக கேப்டன் என்பதால் 30 யார்ட் வளையத்திற்குள் தான் ரோகித் சர்மா ஃபீல்டிங் செய்வார். விராட் கோலி இந்திய அணிக்காக கேப்டன்சி செய்த போது கூட, ரோகித் சர்மாவை 30 யார்ட் வளையத்திற்கு வெளியில் அனுப்ப மாட்டார். ஆனால் இன்றைய ஆட்டத்தில் ரோகித் சர்மா லாங் ஆன் திசைக்கு கொண்டு செல்லப்பட்டார். அதன்பின் ஸ்லிப் திசைக்கு மாற்றப்பட்டு ஃபீல்டிங் நிறுத்தப்பட்டார்.
இதனால் ரோகித் சர்மா முகத்திலேயே விரக்தியில் இருந்தது தெரிந்தது. டேவிட் மில்லர் கொடுத்த கேட்சை பிடித்த ஹர்திக் பாண்டியா ஆக்ரோஷமாக கொண்டாடிய போதும் கூட, ரோகித் சர்மா எந்த உற்சாகமும் இல்லாமல் நடந்து சென்றார். அதேபோல் பவுலர்களுக்கு ஆலோசனை கூறிய போது கூட சில புதிய வீரர்கள் ஏற்காமல் விலகி சென்றனர். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. இதனால் ரோகித் சர்மா ரசிகர்கள் சோகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.