மும்பை: 2025 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய போட்டி வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. முதல் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் இந்தப் போட்டியில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற நிலையில் இருந்தது.
இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். முதல் இரண்டு போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியின் துவக்க வேகப்பந்துவீச்சாளர்களான ட்ரெண்ட் போல்ட் மற்றும் தீபக் சஹார் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாமல் இருந்தனர்.

ஆனால், வான்கடே மைதானத்தில் வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைப்பு இருந்த நிலையில் அவர்கள் இருவரும் அபாரமாக செயல்பட்டனர். வான்கடே மைதானத்தில் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதற்காகவே பவர்பிளே ஸ்பெஷலிஸ்ட் பவுலர்களான இவர்கள் இருவரையும் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் தேர்வு செய்து இருந்தது.
அதை அவர்கள் நிரூபித்தனர். தீபக் சஹார் இரண்டு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். ட்ரெண்ட் போல்ட் முதல் ஓவரிலேயே முதல் விக்கெட்டை வீழ்த்தினார். அஸ்வனி குமார் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரும் தாங்கள் வீசிய முதல் ஓவர்களிலேயே விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
இதை அடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏழு ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 45 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் துவக்க வீரர் சுனில் நரைன் இரண்டு பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமல் ட்ரெண்ட் போல்ட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து அந்த அணியின் அதிரடி பேட்ஸ்மேன் குவின்டன் டி காக் இரண்டாவது ஓவரின் முதல் பந்தில் தீபக் சஹார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அதன் பின் கொல்கத்தா அணியின் கேப்டன் அஜிங்க்யா ரஹானே மற்றும் அங்குரிஷ் ரகுவன்ஷி அதிரடியாக விளையாட முயன்றனர். அஜிங்க்யா ரஹானே 7 பந்துகளில் 11 ரன்கள் எடுத்த நிலையில் நான்காவது ஓவரின் முதல் பந்தில் அஸ்வனி குமார் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து ஐந்தாம் வரிசையில் வெங்கடேஷ் ஐயர் களம் இறங்கினார். மூன்று விக்கெட்டுகளை இழந்த நிலையில் பொறுப்பாக ஆட வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். ஆனால் அவர் ஆறாவது ஓவரில் தீபக் சஹார் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். வெங்கடேஷ் ஐயர் ஒன்பது பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார்.
மறுபுறம் அங்குரிஷ் ரகுவன்ஷி விக்கெட் வீழ்ச்சிக்கு இடையே அதிரடியாக ஆடி வந்தார். அவர் 16 பந்துகளில் 26 ரன்கள் எடுத்த நிலையில் ஹர்திக் பாண்டியாவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதை அடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்கள் மட்டுமே எடுத்தது.
தொடர்ந்து அஷ்வனி குமார் 3 ஓவர்களில் 4 விக்கெட்களை வீழ்த்தினார். விக்னேஷ் புத்தூர் மற்றும் மிட்செல் சான்ட்னர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். பின்னர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 16.2 ஓவர்களில் 116 ரன்கள் எடுத்து ஆல் - அவுட் ஆனது.