லக்னோ: மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் செய்த சில செயல்கள் அந்த அணியின் உரிமையாளர் ஆகாஷ் அம்பானியை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியது. கடைசி ஓவரில் வெற்றிக்கு அருகே சென்று கொண்டிருந்த போது ஹர்திக் பாண்டியா எடுத்த இரண்டு மோசமான முடிவுகள் கடும் விமர்சனத்தையும் கிளப்பி உள்ளது.
அது அந்த அணியின் உரிமையாளர் ஆகாஷ் அம்பானியையும் பாதித்திருப்பது நேரலையில் காட்டப்பட்டது. முன்னாள் வீரர்களும், ரசிகர்களும் ஹர்திக் பாண்டியாவை விளாசி வருகின்றனர். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் ரோஹித் சர்மாவை மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து நீக்கி இருந்தார். அது ஒரு புறம் இருக்க, இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் சேர்த்தது.
204 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி நமன் திர் மற்றும் சூர்யகுமார் யாதவ் அதிரடி ஆட்டத்தால் வேகமாக இலக்கை நோக்கி முன்னேறியது. நமன் திர் 24 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். சூர்யகுமார் யாதவ் 43 பந்துகளில் 67 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அப்போது ஐந்தாம் வரிசையில் பேட்டிங் செய்து வந்த திலக் வர்மா பவுண்டரிகளை அடிக்க முடியாமல் திணறிக் கொண்டு இருந்தார். அப்போது ஹர்திக் பாண்டியாவும் களத்திற்கு வந்தார்.
கடைசி இரண்டு ஓவர்களில் 29 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலை இருந்தது. இந்த நிலையில் 19-வது ஓவரில் திலக் வர்மா தான் சந்தித்த இரண்டு பந்துகளில் ஒவ்வொரு ரன் மட்டுமே ஓடி எடுத்தார். ஹர்திக் பாண்டியாவும் அந்த ஓவரில் பவுண்டரி அடிக்கவில்லை. இந்த சூழ்நிலையில் பவுண்டரி அடிக்க முடியவில்லை என்பதை சுட்டிக் காட்டி திலக் வர்மாவை ரிட்டயர் அவுட் ஆகுமாறு ஹர்திக் பாண்டியா கூறினார்.
திலக் வர்மா 23 பந்துகளில் 25 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆடுகளத்தை விட்டு வெளியேறினார். அவருக்கு அடுத்து வேறு அதிரடி ஆட்டம் ஆடும் பேட்ஸ்மேன்களும் அணியில் இல்லை என்ற சூழ்நிலையில் எதற்காக அவரை பாண்டியா ரிட்டயர் அவுட் ஆக்கி அனுப்பினார் என்று பலருக்கும் புரியவில்லை.
மேலும், 19-வது ஓவரில் ஹர்திக் பாண்டியாவும் பவுண்டரி அடிக்கவில்லை. இரண்டு பேட்ஸ்மேன்களுமே பவுண்டரி அடிக்கவில்லை என்ற நிலையில் ஒருவரை மட்டும் அனுப்புவது சரியானதாகவும் இல்லை. அடுத்து மிட்செல் சாண்ட்னர் தான் களத்துக்கு வந்தார். இந்த குழப்பம் நடந்து முடிந்ததை அடுத்து கடைசி ஓவரில் 22 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலை இருந்தது.
மிட்செல் சாண்ட்னர் அதிரடி ஆட்டம் ஆடும் பேட்ஸ்மேனும் அல்ல. இந்த நிலையில் கடைசி ஓவரில் ஹர்திக் பாண்டியா தான் மட்டுமே நின்று 22 ரன்கள் அடித்து விடலாம் என நினைத்தார். கடைசி ஓவரின் முதல் பந்தில் சிக்ஸ் அடித்தார். இரண்டாவது பந்தில் இரண்டு ரன்கள் எடுத்தார். மூன்றாவது பந்தை ஹர்திக் பாண்டியா அடித்தார். அதில் ஒரு ரன் ஓடியிருக்கக் கூடிய வாய்ப்பு இருந்தது. ஆனால், அப்படி செய்தால் சாண்ட்னர் நான்காவது பந்தை சந்திப்பார் என்பதால் ஹர்திக் பாண்டியா ரன் ஓடவில்லை.
அப்போது வெற்றிக்கு நான்கு பந்துகளில் 14 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. அதிரடி ஆட்டம் ஆடக் கூடிய சர்வதேச அனுபவம் உடைய திலக் வர்மாவை வெளியே அனுப்பிவிட்டு ஆல் ரவுண்டரான மிட்செல் சாண்ட்னரை வைத்துக்கொண்டு, அவருக்கு ஸ்ட்ரைக்கையும் கொடுக்க மனம் இல்லாமல் ஹர்திக் பாண்டியா ஒரு ரன் ஓட மறுத்தது மிகப்பெரிய சர்ச்சைக்குரிய முடிவாக இருந்தது.
இதை பார்த்து மும்பை அணியின் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி அதிர்ச்சியில் இருந்தார். தனது கோபத்தை முகத்தில் வெளிப்படுத்தினார். அதன் பின் நான்காவது பந்திலும் ஹர்திக் பாண்டியா ஒரு ரன் எடுக்க வாய்ப்பு இருந்தும் அதை செய்யவில்லை. அதன் பின் கடைசி இரண்டு பந்துகளில் ஒரு ரன் மட்டுமே எடுக்கப்பட்டது.
இதை அடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஒருவேளை திலக் வர்மாவை ஆடுகளத்தில் நிற்க வைத்திருந்தால் கடைசி ஓவரில் ஹர்திக் பாண்டியா ஒன்று அல்லது இரண்டு சிங்கிள் ரன்களை எடுத்து இருக்க முடியும். மறுபுறம் திலக் வர்மாவும் சிக்ஸ் அடிக்கவோ, பவுண்டரி அடிக்கவோ முயற்சி செய்து இருக்கலாம். இரண்டு மோசமான முடிவுகளை அடுத்தடுத்து எடுத்து ஹர்திக் பாண்டியா சர்ச்சையை கிளப்பி இருக்கிறார்.