அகமதாபாத்: 2025 ஐபிஎல் தொடரின் இரண்டாவது தகுதிச் சுற்றுப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை பஞ்சாப் கிங்ஸ் வீழ்த்திய நிலையில், அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மாபெரும் சாதனை செய்திருக்கிறார். ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த ஒரு கேப்டனும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை அவர் செய்திருக்கிறார்.
மூன்று வெவ்வேறு ஐபிஎல் அணிகளுக்கு கேப்டனாக செயல்பட்டு, அந்த மூன்று அணிகளையும் ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் ஸ்ரேயாஸ் ஐயர். எந்த ஒரு கேப்டனும் இப்படி ஒரு சாதனையை செய்ததில்லை.

2019 ஆம் ஆண்டு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு பிளே ஆஃப் சுற்றுக்கு அழைத்துச் சென்றார் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர். அடுத்து 2020 ஆம் ஆண்டு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார்.
அதன் பின் 2024 ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றதுடன் ஐபிஎல் கோப்பையும் வென்றார். அதன் பிறகு அந்த அணியில் இருந்து விலகினார். பின்னர் ஸ்ரேயாஸ் ஐயர் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். சுமார் 11 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியை 2025 ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்று இருக்கிறார்.
தோனி மற்றும் ரோகித் சர்மா ஆகியோருக்கு அடுத்து ஸ்ரேயாஸ் ஐயர் தான் சிறந்த ஐபிஎல் கேப்டன் என பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும், 86 ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டிருக்கும் ஸ்ரேயாஸ் ஐயர், அதில் 50 வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்து ஐபிஎல் வரலாற்றில் மிகச் சிறந்த கேப்டன்கள் வரிசையில் முன்னிலையில் இருக்கிறார்.
இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 203 ரன்கள் எடுத்த நிலையில், அடுத்து யாரும் எதிர்பார்க்காத ஒரு கேப்டன் இன்னிங்சை ஆடினார் ஸ்ரேயாஸ் ஐயர். 41 பந்துகளில் 87 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 5 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களை அடித்து இருந்தார்.
தனது அணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற முடிவில் அவர் ஆடினார். பஞ்சாப் அணி 19 ஓவர்களில் வெற்றி பெற்றது. தற்போது இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக விளையாட உள்ளது.