ஒய்டு யார்க்கர், பவுன்சர் கூட வீசவில்லை.. ஆஃப்கானிஸ்தான் செய்த தவறுகள்.. தோல்விக்கு காரணமே அதுதான்!
மும்பை: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி தோல்வியடைந்ததற்கான காரணம் குறித்து பார்க்கலாம்.
உலகக்கோப்பை தொடரில் ஆஃப்கானிஸ்தான் அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 291 ரன்கள் விளாசியது. சிறப்பாக ஆடிய ஜத்ரான் 129 ரன்களை விளாசி அசத்தினார்.

தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 91 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால் மேக்ஸ்வெல் ஆடிய அசாத்திய இன்னிங்ஸ் காரணமாக ஆஸ்திரேலிய அணி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பதிவு செய்துள்ளது. சிறப்பாக ஆடிய மேக்ஸ்வெல் 128 பந்துகளில் 201 ரன்கள் விளாசி சாதனை படைத்தார். இவருக்கு உறுதுணையாக ஆடிய கம்மின்ஸ் 68 பந்துகளில் 12 ரன்கள் சேர்த்து கடைசி வரை களத்தில் இருந்தார்.
ஆஃப்கானிஸ்தான் அணியின் கைகளில் இருந்த வெற்றியை, ஆஸ்திரேலிய அணியின் மேக்ஸ்வெல் தட்டி பறித்துள்ளார் என்றே சொல்லலாம். இந்த போட்டியில் ஆஃப்கானிஸ்தான் தோல்வியடைந்ததற்கு முஜீப் உர் ரஹ்மான் கோட்டைவிட்ட கேட்ச் ஒரு காரணமாக இருந்தாலும், அந்த அணியின் பவுலர்கள் மற்றும் அணி நிர்வாகத்தின் தவறே முக்கிய காரணமாக அமைந்துள்ளது. ஏனென்றால் மேக்ஸ்வெல் 100 ரன்களை கடந்த பின் தசைபிடிப்பு, முதுகு வலியால் பாதிக்கப்பட்டார்.
இதனால் ரன்கள் ஓட முடியாது என்பதால், முழுக்க முழுக்க பவுண்டரி மற்றும் சிக்சர்களையே மேக்ஸ்வெல் அடித்து வந்தார். அதிலும் இரண்டாம் பாதியில் கால்களை கூட நகர்த்தால் ஏராளமான சிக்ஸ், பவுண்டரிகளை விளாசி தள்ளினார். அப்போதும் கூட ஆஃப்கானிஸ்தான் அணி பவுலர்களின் லைன் மற்றும் லெந்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதிக பவுண்டரி எல்லை பக்கம் மேக்ஸ்வெல்லை வரவழைத்து ஒய்டு யார்க்கர் போன்ற பந்துகளையோ, பவுன்சர்களையோ கூட ஆஃப்கானிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர்கள் வீசவில்லை.
ஒரேயொரு விக்கெட்டை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில் கம்மின்ஸ் இருப்பதையே ஆஃப்கானிஸ்தான் அணி பவுலர்கள் மறந்துவிட்டனர் என்ற சொல்லும் அளவிற்கு மேக்ஸ்வெல் பக்கம் அவர்களின் கவனம் இருந்தது. வழக்கமாக ஒவ்வொரு அணிகளும் பல்வேறு வீரர்களுக்கும் பல்வேறு திட்டங்களுடன் களமிறங்குவார்கள். ஒருவேளை எந்த திட்டமும் பலிக்கவில்லை என்றால், புதிய திட்டம் அணி நிர்வாகம் தரப்பில் சொல்லப்படும். அதேபோல் காயத்துடன் ஆடுகிறார் என்பதை அறிந்தும், அவரை கால்களை நகர்த்தி விளையாட வைக்க முயற்சிகளே செய்யப்படவில்லை.
நேற்றைய ஆட்டத்தில் மேக்ஸ்வெல் மட்டுமே அதிரடி ஆட்டம் ஆடுகிறார் என்பதை அறிந்தும், அவரை கட்டுப்படுத்தவோ, அழுத்தம் கொடுக்கவோ ஆஃப்கானிஸ்தான் அணி பவுலர்கள் எந்த முயற்சியும் செய்யவில்லை. மீண்டும் மீண்டும் மிடில் பிட்சில் பந்தை குத்தி சரியாக பேட்டிற்கு வீசினார்கள். மாற்று திட்டத்தை யோசிக்காமல், உருவாக்காமல் ஆஃப்கானிஸ்தான் அணி பவுலர்கள் விளையாடியதே அந்த அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications