"3-2 என இந்தியா வென்றிருக்கலாம்.. ஆனா".. கடைசி மேட்ச்சிலும் வென்ற பின் கேப்டன் சான்ட்னர் பேச்சு
ஹாமில்டன்: நியூசிலாந்து அணி 5-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. முதல் 3 போட்டிகளில் வென்ற இந்திய அணி தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றிய போதிலும், கடைசி 2 போட்டிகளில் தொடர்ச்சியாக வென்று நியூசிலாந்து அணி பதிலடி கொடுத்துள்ளது. இது குறித்து பேசிய அந்த அணியின் கேப்டன் மிட்செல் சான்ட்னர் நியூசிலாந்து அணி தொடரை கைப்பற்றி இருக்க முடியும் என்றார்.
செடான் பார்க் மைதானத்தில் நடந்த 5வது டி20 போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீசியது. இந்திய அணியில் இஷான் கிஷன் 61 ரன்கள், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 50 ரன்கள் குவித்து அரைசதம் அடித்து 3-வது விக்கெட்டுக்கு 93 ரன்கள் சேர்த்தனர். எனினும் ஆடம் மில்னே 4 விக்கெட்கள் வீழ்த்தியதை அடுத்து இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்தது.

அடுத்து ஆடிய நியூசிலாந்து அணி டிம் சீஃபர்ட்டின் 93 ரன்கள் மற்றும் கிளென் பிலிப்ஸின் 65 ரன்கள் ஆட்டத்தால் எளிதாக வெற்றி இலக்கை எட்டியது. கிளென் பிலிப்ஸ் நடப்புத் தொடரில் 341 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதையும் வென்றார்.
இந்தப் போட்டி முடிந்து பேசிய நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சான்ட்னர், "இந்தத் தொடரைத் திரும்பிப் பார்க்கும்போது, ஒரு மிகச் சிறந்த அணிக்கு எதிராக நாங்கள் மிகக் கடுமையாகப் போராடியது புரியும். கிரிக்கெட் ரீதியாகப் பார்த்தால் பல நல்ல விஷயங்கள் நடந்துள்ளன. தொடரின் முடிவில் இந்தியா 3-2 என வென்றதாக புள்ளிவிவரம் காட்டலாம், ஆனால் எங்களின் ஆட்டத்தைப் பார்த்தால் இந்த முடிவு நியூசிலாந்துக்கு சாதகமாக தலைகீழாகக் கூட மாறியிருக்கக்கூடும்" என்றார்.
தொடர்ந்து பேசிய சான்ட்னர், "புதிய பந்தில் ஆரம்பத்தில் நல்ல மூவ்மென்ட் இருந்தது. ஆனால் இஷான் கிஷனும் ஸ்ரேயாஸும் அதிரடியாக அடித்து ரன்களை உயர்த்தினர். எங்கள் அணியின் பலம் தற்போது மிக ஆழமாக உள்ளது. ஒவ்வொரு போட்டியிலும் கிளென் பிலிப்ஸ் இப்படி ரன் குவிப்பது அசாத்தியமானது. அவர் தொடக்கத்தில் சற்று நேரம் எடுத்துக்கொண்டு பின்னர் விளாசுகிறார். எங்கள் பேட்டிங் இந்தத் தொடர் முழுவதும் அருமையாக இருந்தது. பெரும்பாலான போட்டிகளில் 200 ரன்களையும், ஒரு போட்டியில் 260 ரன்களையும் குவித்துள்ளோம்" என்று கூறினார்.


Click it and Unblock the Notifications

