டெல்லி: டி-20 கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லியை முந்தினார் மகளிர் கிரிக்கெட் அணியின் மிதாலி ராஜ். டி-20 போட்டிகளில் 2000 ரன்கள் கடந்த முதல் இந்தியரானார்.
மகளிர் டி-20 ஆசியக் கோப்பை போட்டிகள் கோலாலம்பூரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வென்றது.

இந்த ஆட்டத்தின்போது, இந்திய அணியின் மிதாலி ராஜ் 23 ரன்கள் எடுத்தார். இதன் மூலம், டி-20 கிரிக்கெட் போட்டிகளில் 2,000 ரன்கள் கடந்த முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். 35 வயதாகும் மிதாலி ராஜ், 74 டி-20 போட்டிகளில், 14 அரை சதங்களுடன் 2,015 ரன்கள் எடுத்துள்ளார்.
இதன் மூலம் டி-20ல் 2,000 ரன்கள் கடந்த 7வது வீராங்கனையானார். சார்லோட் எட்வர்ட்ஸ் 2,605 ரன்களும், ஸ்டபானி டெய்லர் 2,582 ரன்களும், சூசி பேட்ஸ் 2,515 ரன்களும் எடுத்துள்ளனர்.
டி-20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த ஆண்களில் மார்ட்டின் குப்தில் 2,271 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். பிரான்டன் மெக்கலம், 2,140 ரன்களுடன் அடுத்த இடத்தில் உள்ளார். இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி 1,983 ரன்களுடன் உள்ளார்.
மிதாலியின் இந்த சாதனையை ஐசிசி மற்றும் பிசிசிஐ பாராட்டுயுள்ளது. ஒருதினப் போட்டிகளில் சார்லோட் எட்வர்ட்ஸ் 191 போட்டிகளில் விளையாடியுள்ளார். அந்த சாதனையை சமீபத்தில் முறியடித்த மிதாலி ராஜ், இதுவரை 194 ஒருதினப் போட்டிகளில், 6,373 ரன்கள் சேர்த்துள்ளார். அதிக ரன்கள் குவித்த வீிராங்கனையாகவும் மிதாலி உள்ளார்.