கொழும்பு: உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக பல்வேறு அணிகளைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்துள்ள சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்னும் 2 வாரங்களில் தொடங்கவுள்ளது. அக்.5ஆம் தேதி தொடங்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர், நவ.19ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. இதற்கான அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். ஒருநாள் போட்டிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து என்று அனைத்து அணிகளும் ஒருநாள் தொடரில் களமிறங்கி வருகின்றன.

ஆனால் அதுவே அந்தந்த அணிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. முக்கியமான வீரர்கள் பலரும் காயம் காரணமாக விலகி வருகின்றனர். அந்த பட்டியல் 15க்கும் அதிகமாக இருப்பது தான் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக கடைசி உலகக்கோப்பையை எந்த எந்த வீரர்கள் ஆடுகிறார்கள் என்ற பட்டியலை தான் ரசிகர்கள் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருப்பார்கள். ஆனால் இம்முறை காயமடைந்த வீரர்களை பட்டியல் போடும் அளவிற்கு விவகாரம் உச்சத்தில் உள்ளது.
அந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது இந்திய அணியின் அக்சர் படேல் தான். ஆசியக் கோப்பைத் தொடரின் போது இடதுகை விரலில் ஏற்பட்ட காயத்தால், அவர் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் நியூசிலாந்து அணியின் நட்சத்திர பவுலரான டிம் சவுதி இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் கேட்ச் பிடிக்க முயன்று காயமடைந்தார். ஸ்கேன் செய்த போது அவருக்கு வலதுகை கட்டை விரல் எலும்பில் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அதேபோல் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியின் போது ஆஸ்திரேலியா அணியின் டிராவிஸ் ஹெட் காயம் காரணமாக வெளியேறி இருக்கிறார். இவரும் உலகக்கோப்பை தொடரில் விளையாட வாய்ப்பில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் அடுத்த வாரம் தொடங்கவுள்ள இந்தியா - ஆஸ்திரேலியா ஒருநாள் தொடருக்கு மேக்ஸ்வெல் சேர்க்கப்பட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
இதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித், கம்மின்ஸ் மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகியோரின் நிலைமை என்னவென்று இதுநாள் வரை தெரிவிக்கப்படவில்லை. அதேபோல் இலங்கை அணியின் நட்சத்திர ஸ்பின்னராக மஹீஷ் தீக்சனா ஹேம்ஸ்ட்ரிங் காரணமாக ஆசியக் கோப்பையில் இருந்து விலகியுள்ளார். அதேபோல் இலங்கை அணியின் ஹசரங்கா, சமீரா ஆகியோரின் நிலையும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
தற்போது பாகிஸ்தான் அணியின் நட்சத்திர பவுலரான நசீம் ஷா தோளில் ஏற்பட்ட காயம் காரணமாக உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பதில் சந்தேகம் என்று தெரிய வந்துள்ளது. அதேபோல் தென்னாப்பிரிக்க அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான அன்ரிக் நார்கியேவும் காயம் காரணமாக தவித்து வருகிறார். இதனால் உலகக்கோப்பை தொடருக்கு முன் வீரர்களை காயமடையவிடாமல் தடுப்பதே அந்தந்த அணிகளுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.