மும்பை: 2007ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி குரூப் சுற்றுடன் வெளியேறிய பின், ராகுல் டிராவிட் கேப்டன்சியை ராஜினாமா செய்தார். அப்போது இந்திய அணியின் கேப்டன்சியை ஏற்குமாறு சச்சின் டெண்டுல்கருடன் பிசிசிஐ தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் சச்சின் டெண்டுல்கர் தரப்பில், தோனியை கேப்டனாக நியமனம் செய்யலாம் என்று பரிந்துரை வழங்கப்பட்டது.
சச்சினின் பரிந்துரைக்கு மதிப்பளித்து இந்திய அணியின் கேப்டன்சியை தோனியிடம் வழங்க, அவர் உடனடியாக டி20 உலகக்கோப்பையை வென்று வரலாறு படைத்தார். அதன்பின் தோனி கேப்டனாக இந்திய அணிக்கு அடுத்தடுத்து பல்வேறு வெற்றிகளை பெற்று வருகிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியை நம்பர் 1 இடத்திற்கு கொண்டு வந்த தோனி, உலகக்கோப்பையை வென்று புதிய வரலாறு படைத்தார்.

அதேபோல் 2013ஆம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபியை வென்று அசத்தினார். இதனால் இந்திய கிரிக்கெட்டில் கபில் தேவ்-க்கு பின் மிகச்சிறந்த கேப்டன் என்ற பெருமையை தோனி பெற்றார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வை பெற்றாலும், 5 ஆண்டுகளுக்கு பின்னரும் தோனி மீதான வெளிச்சம் கொஞ்சம் கூட குறையவில்லை. ஐபிஎல் தொடர் மூலமாக தோனி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்.
இந்த நிலையில் தோனிக்கு கேப்டன்சி வாய்ப்பு மட்டுமல்லாமல், பிளேயிங் லெவன் வாய்ப்பையும் சச்சின் பெற்று கொடுத்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து சச்சின் டெண்டுல்கர் பேசுகையில், முதல்முறையாக வங்கதேசம் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் போது தான் தோனியின் பேட்டிங்கை பார்த்தேன்.
அந்த தொடரில் ஏதோவொரு போட்டியின் தோனி கடைசி நேரத்தில் களமிறங்கி சில நல்ல ஷாட்களை ஆடியிருப்பார். ஆனால் நான் தோனியின் பேட்டில் இருந்து வந்த சத்தத்தை கவனித்து உடனடியாக என் பின் அமர்ந்திருந்த சவுரவ் கங்குலியிடம் கூறினேன். அந்த பையன் பந்தை அடிக்கும் போது அவன் பேட்டில் இருந்து வரும் சத்தம் வித்தியாசமான இருக்கிறது என்றேன்.
அது என்ன சத்தம் என்றால், பிக் ஹிட்டர்ஸிடம் ஒரு ஸ்பெஷல் இருக்கும். அது என்னவென்றால், அவர்கள் பேட் மூலம் பந்தை அடிக்கும் போது நிச்சயம் சிக்சருக்கு செல்லும் என்பது தெரியும். அந்த சிக்சர்களை கவனித்து பார்த்தால், பந்துகள் கூடுதலாக 10 அடிகள் சென்று விழுவது தெரியும். தோனியின் பேட்டிங்கில் அந்த தரத்தை கண்டு கங்குலியிடம் கூறினேன்.
அதேபோல் இந்திய அணிக்கு வந்த பின் தோனி வேண்டுமென்றே என் அருகில் அமர்வதை மறுத்து, வேறு இடத்தில் அமர்வதாக சில வீரர்கள் என்னிடம் கூறினார்கள். விமானப் பயணங்களில் பெரும்பாலான நேரங்கள் எங்கள் இருவருக்கும் தான் அருகருகே இருக்கை அமைந்தது. ஆனாலும் அவர் வேறு இருக்கைக்கு செல்வதை கண்டேன். இது பல ஆண்டுகளாக தொடர்ந்தது.
இதன்பின் நீண்ட ஆண்டுகளுக்கு பின்னர் தான் தோனி என் அருகில் அமர தொடங்கினார். சில ஆண்டுகள் இணைந்து பயணித்த போதும், தோனியிடம் இருந்து கூச்சம் மட்டும் அகலவில்லை. அதன்பின் மைதானத்தில் நேரம் செலவிட்ட பின், இருவரும் நன்றாக உரையாட தொடங்கியதாக தெரிவித்துள்ளார். தோனி குறித்த சச்சினின் இந்த பேச்சு ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.