"உன்ன போல் ஒருத்தனை பார்த்தது இல்லை" மனைவியுடன் விளையாடிய தோனி.. அம்பானி குடும்பத்துடன் நவராத்திரி விழா
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி ஆகியோர் குஜராத்தின் ஜாம்நகரில் நடைபெற்ற நவராத்திரி விழாவில் பங்கேற்று கொண்டாடினர். மோதிகாவடியில் உள்ள ரிலையன்ஸ் கிரீன்ஸ் டவுன்ஷிப்பில் நடைபெற்ற இந்த விழாவில், அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோருடன் தோனி தம்பதியினர் பொழுதுபோக்கு பூங்கா விளையாட்டுகளை ரசிக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி கவனத்தைப் பெற்றுள்ளன.
அப்போது தோனி, சாக்ஷிக்கு ஐஸ்கிரீம் உட்டி விடுவது போல் விளையாடி ஏமாற்றிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த கொண்டாட்டத்தில் பாலிவுட் பிரபலங்களான கீர்த்தி சனோன், வீர் பஹாரியா, இயக்குனர் அட்லீ ஆகியோரும் கலந்துகொண்டனர். மேலும் வருண் தவான், விக்கி கௌஷல், டைகர் ஷெராஃப், மௌனி ராய், ஷாகித் கபூர் மற்றும் திஷா படானி ஆகியோரின் கலைநிகழ்ச்சிகளும் இதில் இடம்பெற்றன.

அம்பானி குடும்பத்துடன் தோனி காட்டும் நட்பால், அவர் சிஎஸ்கேவை விட்டு சென்று விடுவாரோ என்ற கலக்கம் தமிழக ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம், மும்பை இந்தியன்ஸ் அணியும் தற்போது புதிய பயிற்சியாளரை தேடி வருவதால், இந்த சந்தேகம் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால், இதற்கு வாய்ப்பே இல்லை.
இதனிடையே, 45 வயதான தோனி, காயம் காரணமாக இந்த ஆண்டின் ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கே அணி, 14 போட்டிகளில் 6 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 8-வது இடத்தைப் பிடித்து, தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறும் வாய்ப்பை இழந்தது.
ஐபிஎல் 2026 சீசனின் சுமாரான செயல்பாட்டிற்குப் பிறகு, சிஎஸ்கே அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து ஸ்டீபன் பிளெமிங் விலகினார். அதைத்தொடர்ந்து, இந்தியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்களான ஜாகீர் கானை புதிய தலைமைப் பயிற்சியாளராகவும், மோஹித் சர்மாவை பந்துவீச்சு பயிற்சியாளராகவும் அணி நிர்வாகம் நியமித்தது. இந்த புதிய பயிற்சியாளர்களின் தேர்வில் தோனியே முக்கிய முடிவுகளை எடுத்துள்ளதாக அஸ்வின் தெரிவித்துள்ளார்.மேலும் சிஎஸ்கே அணியின் மெண்டராக தோனி செயல்பட வாய்ப்புள்ளதாக அஸ்வின் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications


