பிசிசிஐ தேர்வுக்குழு தலைவராக பிரக்யான் ஓஜா நியமனம்.. வசீம் ஜாபருக்கு பதவி கிடைக்காதது ஏன்?
மும்பை: இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி தேர்வுக்குழுவின் புதிய தலைவராக முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜாவை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக நியமித்துள்ளது. அத்துடன், தேர்வுக்குழுவில் இருந்து விலகிய அஜித் அகர்கருக்குப் பதிலாக முன்னாள் வீரர் ரமேஷ் பவார் புதிய உறுப்பினராகச் சேர்க்கப்பட்டுள்ளார்.
பிசிசிஐ விதிகளின்படி, தேர்வுக்குழு உறுப்பினர்களில் அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய மூத்த வீரரே தலைமைத் தேர்வாளராக நியமிக்கப்படுவார். தற்போதைய தேர்வுக்குழுவில் இடம்பெற்றுள்ள சிவ சுந்தர் தாஸ், ஆர்.பி. சிங், அஜய் ரத்ரா மற்றும் ரமேஷ் பவார் ஆகியோரை விட பிரக்யான் ஓஜா அதிகபட்சமாக 24 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இதன் காரணமாகத் தெற்கு மண்டலத் தேர்வாளரான ஓஜாவுக்குத் தலைமைத் தேர்வாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அசோக் மல்ஹோத்ரா மற்றும் ஜடின் பரஞ்சபே ஆகியோர் அடங்கிய கிரிக்கெட் ஆலோசனை குழு நேர்காணல் நடத்தி ரமேஷ் பவாரை ஒருமனதாகப் பரிந்துரைத்தது. 2023 ஜூலை முதல் தலைமைத் தேர்வாளராகப் பணியாற்றிய அஜித் அகர்கர், பிசிசிஐ உடனான கருத்து வேறுபாடு காரணமாகத் தனது ஒப்பந்தத்தை நீட்டிக்கவில்லை.
அவரது பதவிக் காலத்தில் இந்திய அணி டி20 உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி உள்ளிட்ட முக்கியக் கோப்பைகளைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. அகர்கரின் பங்களிப்புக்கு பிசிசிஐ தனது நன்றியைத் தெரிவித்துள்ளது.மேற்கு மண்டல இடத்திற்கு ரமேஷ் பவாருடன் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் வசீம் ஜாஃபரும் போட்டியிட்டார்.
ஜாஃபர் 31 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்டவர். அவர் தேர்வு செய்யப்பட்டிருந்தால், மூப்பு அடிப்படையில் ஓஜாவை விஞ்சி அவரே தலைமைத் தேர்வாளராகியிருப்பார். இருப்பினும், 2027 ஒருநாள் உலகக்கோப்பை வரவுள்ள நிலையில், தேர்வுக் கொள்கைகளில் தொடர்ச்சி இருக்க வேண்டும் என்பதற்காகவும், தலைமைப் பொறுப்பில் திடீர் மாற்றத்தைத் தவிர்க்கவுமே பிசிசிஐ ரமேஷ் பவாரைத் தேர்வு செய்தது.
இந்திய அணிக்காக 2 டெஸ்ட் மற்றும் 31 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ரமேஷ் பவார், இந்திய மகளிர் தேசிய அணி மற்றும் மும்பை மாநில அணியின் பயிற்சியாளராகவும் பணியாற்றிய அனுபவம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications


