ராஞ்சி : இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி இருவரும் தங்களது ஜனநாயக கடமையாற்றிய வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.
ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் சிஎஸ்கே அணி வெளியேறியது. ஆர்சிபி அணிக்கு எதிரான வாழ்வா சாவா போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வியடைந்ததையடுத்து, சிஎஸ்கே அணியின் பயணம் முடிவுக்கு வந்தது. இதனால் சிஎஸ்கே அணி ரசிகர்கள் சோகமடைந்தனர். ஏனென்றால் தோனியின் கடைசி ஆட்டம் சென்னையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் பெங்களூரு மைதானத்தில் கடைசி போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வியடைந்தது. இதனால் அடுத்த சீசனில் தோனி விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சீசனில் தோனி மொத்தமாக 11 இன்னிங்ஸ்களில் 161 ரன்களை விளாசினார். இதனிடையே சிஎஸ்கே - ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான கடைசி போட்டிக்கு பின் தோனி நேரடியாக அவசர அவசரமாக ராஞ்சி புறப்பட்டார்.
அதுவும் பேசஞ்சர் விமானத்தில் தோனி அவசரமாக பயணித்தது ஏன் என்று புரியாமல் குழம்பினர். இந்த வீடியோவும் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகியது. இதன்பின் சொந்த ஊரான ராஞ்சியில் தங்கியிருந்த தோனி, இன்று தனது மனைவியுடன் ராஞ்சியில் உள்ள வாக்குசாவடிக்கு சென்று ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளார்.
லோக் சபா தேர்தலின் 6வது கட்டமாக 8 மாநிலங்களில் மொத்தமாக 58 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் 4 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த சூழலில் தோனி தனது வாக்கினை செலுத்தியுள்ளார். வழக்கமாக டீ-ஷர்ட், கூலிங் கிளாஸ் அணிந்து வாக்கு செலுத்த தோனி வந்த போது, கேமராக்கள் மொத்தமாக அவர் பக்கம் திரும்பியது.
இதன்பின் வாக்கு செலுத்திவிட்டு கேமராக்கள் சூழ தோனி மீண்டும் காரில் ஏறி வீட்டிற்கு புறப்பட்டார். இந்திய கிரிக்கெட் ஜாம்பவானாக இருந்த போதும், இதுவரை தோனி எந்தவித அரசியல் கருத்துகளையும் கூறியதில்லை. விவசாயிகள் போராட்டம் குறித்து எந்த கருத்தையும் வெளியிடாத தோனி, ராமர் கோவிலுக்கு அழைக்கப்பட்ட போதும் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.