மும்பை: 2011 ஒருநாள் போட்டி உலக கோப்பை தொடருக்கு முன் வரை இந்திய அணியில் இடம் பெற்று இருந்தார் ரோஹித் சர்மா. ஆனால், உலகக்கோப்பை தொடரில் ரோஹித் சர்மா நீக்கப்பட்டார். அவரை நீக்குவதற்கான சரியான காரணம் எதுவும் அப்போது கூறப்படவில்லை.
இந்த நிலையில் 2011 உலகக் கோப்பைக்கான அணியை தேர்வு செய்த தேர்வு குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான ராஜா வெங்கட் அப்போது என்ன நடந்தது? யார் ரோஹித் சர்மா பெயரை நீக்கச் சொன்னது? என்பது குறித்த உண்மையை உடைத்து இருக்கிறார்.

ரோஹித் சர்மா 2007 டி20 உலகக் கோப்பை, 2009 மற்றும் 2010 டி20 உலகக் கோப்பை அணிகளில் இடம் பெற்று இருந்தார். அவர் அப்போது மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆகவும், பகுதி நேர சுழற் பந்துவீச்சாளராகவும் இந்திய அணியில் இடம் பெற்று இருந்தார். இந்த நிலையில். அவர் 2011 ஒருநாள் போட்டி உலகக் கோப்பையில் மாற்று வீரராகவாவது இடம் பிடிப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
அதே போல தேர்வு குழுவினரும் ரோஹித் சர்மாவை 15 வது வீரராக அணியில் சேர்த்து இருந்தனர். அப்போதைய பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் ரோஹித் சர்மாவை தேர்வு செய்ய ஒப்புக்கொண்டு இருந்தார். இறுதியாக தேர்வு குழுவினர் தேர்வு செய்த பதினைந்து வீரர்கள் பட்டியலை கேப்டன் தோனிக்கு அனுப்பினார்கள். அப்போது தோனி 15 வது வீரராக சேர்க்கப்பட்டிருந்த ரோஹித் சர்மாவை நீக்க சொல்லிவிட்டு, அவருக்கு பதிலாக முழு நேர சுழற் பந்துவீச்சாளர் பியூஷ் சாவ்லா பெயரை சேர்க்குமாறு தேர்வு குழுவினரிடம் கூறினார்.
தோனி இந்த முடிவை எடுத்தவுடன் பயிற்ச்சியாளர் கேரி கிர்ஸ்டன் பல்டி அடித்து பியுஷ் சாவ்லா தான் சரியான தேர்வு என கூறினார். கேப்டன் மற்றும் பயிற்சியாளர் இருவருமே ரோஹித் சர்மாவை நீக்க சொன்னதால் வேறு வழி இன்றி தேர்வுக் குழுவினர் ரோஹித் சர்மாவை நீக்கிவிட்டு பியூஷ் சாவ்லாவை சேர்த்தனர். இந்த தகவலை ராஜா வெங்கட் ஒரு பேட்டியில் விரிவாக கூறியிருக்கிறார்.
இதுகுறித்து ராஜா வெங்கட் பேசுவையில், "நாங்கள் அணித் தேர்வுக்காக அமர்ந்து பேசும்போது ரோஹித் சர்மா குறித்து விவாதித்தோம். அவர் உலகக் கோப்பை அணியில் இடம் பெறக்கூடிய வீரராகவே இருந்தார். அப்போது மற்றொரு தேர்வுக் குழு உறுப்பினர் யாஸ்பால் சர்மா மற்றும் நான் தென்னாப்பிரிக்காவில் இருந்தோம்."
"அப்போது இந்தியா - தென்னாப்பிரிக்கா தொடர் நடைபெற்றுக் கொண்டு இருந்தது. மறுபுறம் சென்னையில் மற்ற மூன்று தேர்வுக் குழுவினர் இருந்தனர். ஸ்ரீகாந்த், சுரேந்திர பாவே மற்றும் நரேந்திர ஹிர்வானி ஆகிய மூன்று தேர்வு குழுவினரும், நாங்களும் இணைந்து முதல் 14 வீரர்களை தேர்வு செய்தோம். அதை பிசிசிஐ அதிகாரிகள் குழு ஒப்புக்கொண்டது. அடுத்து 15 வது வீரராக ரோஹித் சர்மா பெயரை கூறினோம்."
"கேரி கிர்ஸ்டன் அது சிறந்த தேர்வு எனக் கூறினார். ஆனால் கேப்டனோ பியூஷ் சாவ்லா தான் வேண்டும் என்றார். உடனே கிர்ஸ்டன் பல்டி அடித்து விட்டார். பியுஷ் தான் நல்ல தேர்வு என்றார். அதனால் தான் ரோஹித் சர்மாவை நாங்கள் நீக்க வேண்டியதாகி விட்டது. அப்போது ரோஹித் சர்மாவிடம் இது குறித்து பேசக்கூடிய வாய்ப்பு எங்களுக்கு கிடைக்கவில்லை. அவரை தேர்வு செய்யாதது எங்களுக்கும் ஏமாற்றமாகவே இருந்தது. ஆனால் கேப்டனும், பயிற்சியாளரும் பியூஷ் தான் 15 வது வீரராக இருக்க வேண்டும் என்றதால் நாங்கள் அதற்கு ஒப்புக் கொண்டோம். முதலில் தேர்வு செய்த 15 வீரர்கள் தான் சரியான தேர்வு என நாங்கள் கருதினோம்." என்றார் ராஜா வெங்கட்.
பின்னர், இந்திய அணி 2011 ஒருநாள் போட்டி உலகக் கோப்பையை வென்றதை அடுத்து தோனியின் தேர்வுதான் சரி என்பதை அனைவரும் ஒப்புக் கொள்ள வேண்டியதாகி விட்டது. அதே சமயம், ரோஹித் சர்மா உலகக்கோப்பை வாய்ப்பை இழந்ததால் ஏமாற்றம் அடைந்தாலும். அதன் பின் கடுமையாக உழைத்து இந்திய அணியில் மீண்டும் இடம் பெற்றார். இரண்டு ஆண்டுகளுக்குப் பின் எந்த கேப்டன் தோனி அவரை அணியிலிருந்து நீக்கினாரோ, அவரே ரோஹித் சர்மாவின் கிரிக்கெட் வாழ்வை உச்சத்துக்கு கொண்டு செல்லும் வகையில், துவக்க வீரராக களம் இறக்கினார். அந்த முயற்சி மாபெரும் வெற்றி பெற்றது. அப்போதிருந்து இப்போது வரை உலகின் சிறந்த துவக்க வீரர்களில் ஒருவராக இருக்கிறார் ரோஹித் சர்மா.