அகமதாபாத் : ஐபிஎல் தொடர் நாளை நடைபெற உள்ள நிலையில் இன்று பாரம்பரிய கேப்டன்கள் அறிமுகம் நிகழ்ச்சி நடைபெற்றது . இதில் ஐபிஎல் கேப்டன்கள் அனைவரும் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு வழங்கப்படும் கோப்பையுடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் ஹைதராபாத் அணியில் தற்காலிக கேப்டன் புவனேஸ்வர் குமார், டெல்லி அணி கேப்டன் டேவிட் வார்னர், ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன், குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா, சிஎஸ்கே கேப்டன் தோனி, லக்னோ கேப்டன் கே எல் ராகுல், பஞ்சாப் அணி கேப்டன் ஷிகர் தவான், கே கே ஆர் அணி கேப்டன் நிதிஷ் ரானா, ஆர் சி பி கேப்டன் டுப்ளசிஸ் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இதை பார்த்த ரசிகர்கள் முக்கியமான அணியாக விளங்கும் மும்பை ஏன் இதில் இடம் பெறவில்லை என கேள்வி எழுப்பினர். ரோகித் சர்மா ரசிகர்கள் பலரும் அவர் ஏன் அகமதாபாத்துக்கு வரவில்லை என சமூக வலைத்தளத்தில் வேர் இஸ் ரோகித் சர்மா என ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தோனியின் மகத்துவத்தை உணர்த்தும் ஒரு புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
அதில் 2008 ஆம் ஆண்டு இதேபோன்று கோப்பை அறிமுக நிகழ்ச்சியில் டெக்கான் சார்ஜஸ் கேப்டன் கில்கிறிஸ்ட், மும்பை கேப்டன் சச்சின், ஆர்சிபி கேப்டன் கும்ப்ளே, பஞ்சாப் அணி கேப்டன் சங்ககாரா, ராஜஸ்தான் அணி கேப்டன் வார்னே, டெல்லி கேப்டன் கம்பீர் ,கொல்கத்தா அணி கேப்டன் கங்குலி ஆகியோர்களுடன் சிஎஸ்கே கேப்டன் தோனி இருக்கிறார்.
தற்போது 15 ஆண்டுகள் கழிந்த நிலையில் மற்ற அனைத்து அணிகளின் கேப்டன்களும் ஓய்வு பெற்ற நிலையில் தோனி மட்டும் தற்போது நிலையாக நிற்கிறார். இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அன்றும் இன்றும் ஒரே கேப்டன் தோனி என அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது தோனியின் திறமையையும், உடல் தகுதியையும், போட்டியில் நிறைந்த உலகத்தில் தொடர்ந்து முதன்மையான வீரராக தோனி இருப்பதையும் உணர்த்துவதாக கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.