சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டனாக களமிறங்கியுள்ள தோனிக்கு தற்போது மூட்டு வலி ஏற்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக தோனி பேட்டிங் செய்யும்போது கடைசி நேரத்தில் தான் களமிறங்குகிறார்.
மேலும் தோனியால் பழையபடி விக்கெட் கீப்பிங் செய்ய முடியவில்லை. தற்போது தோனிக்கு 41 வயது ஆகிவிட்டதால் உடல் தகுதியில் பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நாளை வெள்ளிக்கிழமை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை தனது சொந்த மண்ணான சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொள்கிறது .

இந்த போட்டிக்கான பயிற்சியில் நியூசிலாந்து வீரர் டிவோன் கான்வே விக்கெட் கீப்பிங் பயிற்சியை செய்து வந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் குழம்பிப் போய்விட்டனர். பயிற்சியில் தோனி பங்கேற்கவில்லை. இதன் காரணமாக தோனி நாளைய போட்டியில் பங்கேற்பாரா என்பது சந்தேகமாகிவிட்டது. இல்லையெனில் தோனி இம்பாக்ட் வீரராக களமிறங்கி விளையாடுவாரா என எதிர்பார்க்கப்படுகிறது.
அவ்வாறு இம்பேக்ட் வீரராக செயல்பட்டால் கேப்டனாக தோனியால் செயல்பட முடியாது. இதன் காரணமாக நாளைய போட்டியில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக யார் இருப்பார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தோனிக்கு அடுத்தது ஜடேஜா தான் அந்த லிஸ்டில் இருக்கிறார். எனினும் ஜடேஜாவுக்கு கேப்டன்ஷியில் பெரிய அளவில் அனுபவம் இல்லை. கடந்த முறை சிஎஸ்கே அணி அடுத்தடுத்து பல போட்டிகளில் தோல்வியை தழுவியது.
இதனால் ஜடேஜாவை விட ருதுராஜ் கெய்க்வாட்டை தான் கேப்டனாக நியமிக்க வேண்டும் என ரசிகர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். வெள்ளிக்கிழமை சொந்த மண்ணில் ஹைதராபாத்தை எதிர்கொள்ளும் சிஎஸ்கே அணி, ஞாயிற்றுக்கிழமை கொல்கத்தாவில் கே கே ஆர் அணியை எதிர்கொள்கிறது. ஒரு நாள் தான் இடைவெளி இருப்பதால் தோனியின் உடல் தகுதி பாதிக்கப்படும் என்பதால் நாளைய போட்டியில் தோனி பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.