CSK அணி, தோனி இடையே கருத்து வேறுபாடா? அணியில் தொடர்வாரா? சிஎஸ்கே சிஇஓ காசி விளக்கம்
சென்னை: ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடிய மற்றும் அதிக ரன்கள் எடுத்த வீரராக மகேந்திர சிங் தோனி திகழ்கிறார். ஆனால், ஐந்து முறை ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே அணிக்காக, நடந்து முடிந்த 2026 சீசனில் அவர் ஒரு போட்டியில் கூட களிறங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் இந்திய கேப்டனும், புகழ்பெற்ற விக்கெட் கீப்பர்-பேட்டருமான தோனி, 2008 ஆம் ஆண்டில் ஐபிஎல் தொடங்கியதில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைந்துள்ளார். இருப்பினும், 19 ஆண்டுகளில் முதன்முறையாக, 2026 ஆம் ஆண்டில் சென்னை அணிக்காக அவர் ஒரு போட்டியில் கூட ஆடாதது, அவரது ஐபிஎல் எதிர்காலம் குறித்த பல கேள்விகளை எழுப்பியது.

சிஎஸ்கே அணி வீரர்களுடன் பெரும்பாலான பயணங்களில் தோனி உடன் இருந்தபோதிலும், அவர் களமிறங்காததால், ராஞ்சியைச் சேர்ந்த இந்த 45 வயது வீரர் 2026 ஐபிஎல் முடிவில் அணியை விட்டு வெளியேறுவார் என்ற தகவல்கள் எழுந்தன. இந்நிலையில், அவரது எதிர்காலம் குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தற்போது ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துள்ளார்.
காசி விஸ்வநாதன் அளித்த தகவலின்படி, தோனி தனது முடிவுகளை தானே எடுப்பதை விரும்புவதால், அவருடன் அணி நிர்வாகம் இதுவரை எதுவும் விவாதிக்கவில்லை. எனினும், அவர் எந்தப் பதவி வகித்தாலும் சரி, சிஎஸ்கே அணியின் நிரந்தர அங்கமாக தோனி இருக்க வேண்டும் என்பதே அணி நிர்வாகத்தின் விருப்பம் என்றும் காசி குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து பேசிய காசி விஸ்வநாதன், “தோனியுடன் நாங்கள் இதுவரை எதுவும் விவாதிக்கவில்லை, ஏனெனில் தோனி தனது முடிவுகளைத் தானே எடுக்கிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள், நாங்கள் அதை மதிக்கிறோம். வீரராகவோ, பயிற்சியாளராகவோ அல்லது வழிகாட்டியாகவோ எந்தப் பதவியில் இருந்தாலும், அவர் சிஎஸ்கேவில் ஒரு நிரந்தர உறுப்பினராக இருக்க வேண்டும் என்று நாங்கள் எப்போதும் விரும்புகிறோம். அது அவர் என்ன முடிவெடுக்கிறார் என்பதைப் பொறுத்தது. ஒவ்வொரு முடிவும் அவரைச் சார்ந்தது” என்றார்.
“பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதிபெற முடியாதது எங்களுக்கு ஒரு பெரிய ஏமாற்றம். எங்கள் அணியில் பல இளம் வீரர்கள் வந்துள்ளனர். அவர்கள் நிலைபெற சிறிது காலம் தேவை என்பதை நாங்கள் எப்போதும் அறிவோம், மேலும் நாங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். நாங்கள் தகுதிபெற்று சிறப்பாகச் செயல்பட்டபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தோம்.
அதே நேரத்தில், நாங்கள் தகுதிபெறாதபோது அதை நேர்மறையான மனநிலையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும், மேலும் எங்கே தவறுகள் செய்தோம், அவற்றை எவ்வாறு சரிசெய்வது, மீண்டும் வெற்றிப் பாதையில் எப்படி திரும்புவது என்பதையும் கண்டறிய வேண்டும்” என்று காசி தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications

