பெங்களூரு : ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சிஎஸ்கே ஆர்சிபி அணிகள் மோதிய ஆட்டத்தில் மொத்தம் 33 சிக்ஸர்கள், 444 ரன்கள் அடிக்கப்பட்டது. இந்த போட்டியில் சிஎஸ்கே அணி 227 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்திருந்தது.
இதனை அடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணி 191 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றியின் அருகே இருந்த நிலையில் சிஎஸ்கே அணியின் அபார பந்துவீச்சால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்த நிலையில் சிஎஸ்கே கேப்டன் தோனி வெற்றி குறித்து பல்வேறு கருத்துகளை கூறியிருந்தார். அதனை தற்போது பார்க்கலாம். பெங்களூருக்கு வரும்போது உங்களுக்கு தெரிந்து விடும். இது பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளம் தான் என்று..! இரவு நேரத்தில் பனிப்பொழிவும் இருக்கும். இதற்கு தகுந்தார் போல் உங்கள் மனதை நீங்கள் மாற்றிக் கொண்டு விளையாட வேண்டும்.
முதலில் ஆடுகளம் கொஞ்சம் தோய்வாக இருந்தது. அதனைக் கடந்து ரன் அடிக்கும் வேகத்தை அதிகரிப்பது முக்கியம். நாங்கள் ஆட்டத்தை சிம்பிளாகவே அணுகினோம். இரண்டாவது இன்னிங்ஸில் முடிந்த அளவுக்கு போராடினோம். சிவம் துபே அதிரடியாக ஆடக்கூடியவர் என்று எங்களுக்கு தெரியும். அவருக்காக சில திட்டங்களை நாங்கள் வகுத்திருந்தோம்.
ஆனால் பயிற்சி முகாமுக்கு வரும்போது காயத்துடன் தான் சிவம் துபே வந்தார். எனவே எங்களால் அந்தத் திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை. எனினும் அவரால் ஆட்டத்தின் நடுப்பகுதியில் வேகமாக ரன் குவிக்க முடியும் என்று நாங்கள் நம்பினோம். நாங்கள் நம்புவதை விட சிவம் துபே தன்னை நம்ப வேண்டும். நாம் ஒரு அளவுக்கு தான் வீரர்களுக்கு வழிகாட்ட முடியும்.

களத்திற்குள் வந்து விட்டால், அந்த வீரர் தான் அவரைப் பார்த்துக் கொள்ள வேண்டும்.நாம் 220 ரன்களுக்கு மேல் இலக்கை நிர்ணயித்து விட்டோம் என்றால் இரண்டாவது பேட்டிங் செய்யும் அணி அதிரடியாக ஆடுவார்கள் என்பது தெரியும். டுபிளசிஸ் மற்றும் மேக்ஸ்வெல் இருவரும் தொடர்ந்து விளையாடி இருந்தால் அவர்கள் 18-வது ஒவரின் முடிவிலே போட்டியை வென்றிருப்பார்கள்.
நான் விக்கெட் கீப்பராக களத்திற்கு பின்னால் நின்று ஆடுகளம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை கவனித்துக் கொண்டு இருந்தேன். நான் போட்டியின் முடிவு குறித்து யோசிக்காமல் ஆட்டத்தில் என்னென்ன மாற்றங்களை செய்ய வேண்டும்? பந்துவீச்சாளர்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை தான் யோசிப்பேன்.
இதனை நாம் சரியாக செய்தால் முடிவுகள் நமக்கு தகுந்தாற்போல் வரும். எங்கள் அணியில் இளம் பந்துவீச்சாளர்கள் அதிக அளவு இருக்கிறார்கள். நிச்சயமாக இது போன்ற சூழலில் பந்து வீசும் போது அவர்களுக்கு கடினமாக இருக்கும். இருப்பினும் எங்கள் வீரர்கள் கடுமையாக உழைத்து வருகின்றனர். பிராவோ கீழ் அவர்கள் பயிற்சி செய்யும் போது இளம் பந்துவீச்சாளர்கள் நம்பிக்கையை பெறுவார்கள் என நம்புகிறேன் என்று தோனி கூறினார்.