சென்னை: 2026 டி20 உலகக்கோப்பைத் தொடர் இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ள நிலையில், இந்திய அணி குறித்து முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார். இந்தத் தொடரில் மிகவும் ஆபத்தான அணியாக இந்தியா திகழ்வதாகவும், அதே சமயம் ஒரே ஒரு விஷயம் மட்டும் தனக்குக் கவலையளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 அணி, பிப்ரவரி 7ஆம் தேதி தொடங்கும் உலகக்கோப்பைத் தொடருக்கு முழு வீச்சில் தயாராகி வருகிறது. நடப்புச் சாம்பியனான இந்தியா, இம்முறையும் கோப்பையைத் தக்கவைக்கும் முனைப்பில் உள்ளது.

இந்திய அணியின் பலம் குறித்துப் பேசிய தோனி, "இந்தத் தொடரில் மிகவும் ஆபத்தான அணிகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. ஒரு சிறந்த அணிக்குத் தேவையான அனைத்தும் இவர்களிடம் உள்ளது. குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் அவர்களுக்குப் போதிய அனுபவம் இருக்கிறது. நெருக்கடியான நேரங்களை எப்படிக் கையாள வேண்டும் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியைச் சரியாகச் செய்து வருகின்றனர்" என்று பாராட்டினார் தோனி.
இந்திய அணி வலுவாக இருந்தாலும், மைதானத்தின் சூழல் மற்றும் 'பனிப்பொழிவு' குறித்துத் தோனி கவலை தெரிவித்துள்ளார். "எனக்கு எப்போதுமே பனிப்பொழிவு என்றால் பிடிக்காது. அது ஆட்டத்தின் போக்கை முற்றிலுமாக மாற்றிவிடும். பனிப்பொழிவு இருக்கும்போது டாஸ் வெல்வது மிக முக்கியமானதாகிவிடும். இது சில நேரங்களில் ஆட்டத்தின் முடிவைப் பாதிக்கும். ஆடுகளம் மற்றும் வானிலை இரண்டு அணிகளுக்கும் சமமாக இருந்தால், அதாவது பனிப்பொழிவு தாக்கம் இல்லாமல் இருந்தால், 10 போட்டிகளில் விளையாடினால் நிச்சயம் இந்திய அணிதான் அதிக முறை வெற்றி பெறும்" என்று அவர் கூறினார்.
மேலும் டி20 கிரிக்கெட்டின் தன்மை குறித்து எச்சரித்த அவர், "லீக் சுற்றோ அல்லது நாக்-அவுட் சுற்றோ, ஒரு மோசமான நாள் அமைந்தால் ஆட்டமே மாறிவிடும். நம்முடைய வீரர்கள் சொதப்பினாலோ அல்லது எதிரணியில் யாராவது ஒருவர் விஸ்வரூபம் எடுத்தாலோ வெற்றி கைநழுவிப் போகும் வாய்ப்புள்ளது. அதனால் வீரர்கள் காயமடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும், அனைவரும் தங்கள் பொறுப்பை உணர்ந்து ஆட வேண்டும்" என்று தோனி அறிவுறுத்தியுள்ளார்.
2007ஆம் ஆண்டு இந்திய அணிக்கு டி20 உலகக்கோப்பையை வென்று கொடுத்த தோனியின் இந்தக் கருத்து, இந்திய ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.