சென்னை: 2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் தோனியைப் பார்ப்பதற்கு சிஎஸ்கே ரசிகர்கள் ஆவலாக இருந்தனர். அவர்கள் எதிர்பார்த்த அந்தத் தருணம் போட்டியின் இறுதிக்கட்டத்தில் வந்தது.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் 155 ரன்கள் எடுத்த நிலையில், சிஎஸ்கே அணி அதை சேஸிங் செய்து வெற்றி பெற்றது. சரியாக வெற்றிக்கு 4 ரன்கள் தேவை என்னும் நிலையில் தோனி களமிறங்கினார். அவர் வருவதற்காக காத்துக் கொண்டிருந்த ரசிகர்கள் மைதானத்தில் மிகப்பெரிய கோஷத்தை எழுப்பினர்.

தோனிக்கு என்றே எடுத்து வைத்த விஜயகாந்த் திரைப்பட பாடல் ஆன "நீ பொட்டு வச்ச தங்க குடம்.. ஊருக்கு நீ மகுடம்" என்ற பாடலும் ஒளிபரப்பப்பட்டது. அந்தப் பாடலும், அதன் பின்னணியில் ரசிகர்களின் கோஷமும் தொலைக்காட்சியில் பார்த்த மற்ற கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு உணர்ச்சிப் பெருக்கை ஏற்படுத்தியது.
"இதற்காகத்தானே காத்துக் கொண்டிருந்தோம்" என ரசிகர்கள் அனைவரும் நெகிழ்ந்து போனார்கள். அடுத்து தோனி ஒரு பவுண்டரி அல்லது சிக்ஸ் அடித்து, சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு தேவையான 4 ரன்களை எடுப்பார், போட்டியை முடித்து வைப்பார் என ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.
ஆனால், அதில் மட்டும் ஏமாற்றமே மிஞ்சியது. கடைசி ஓவரில் நான்கு ரன்கள் தேவை என்னும் நிலையில் ரச்சின் ரவீந்திரா ஒரு சிக்ஸ் அடித்து சிஎஸ்கே அணியை வெற்றி பெற வைத்தார். தோனி இரண்டு பந்துகளை சந்தித்தும் ரன் எதுவும் எடுக்காமல் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஒரு திரைப்படத்தைப் பார்ப்பதற்கு முன்பு ட்ரெய்லர் பார்ப்பது போல, இந்த ஆண்டு தோனியின் அதிரடி பேட்டிங்கை பார்ப்பதற்கு முன், அவர் ஆடுகளத்திற்கு வருவதை மட்டும் ரசிகர்கள் பார்த்துள்ளனர். அடுத்து வரும் போட்டிகளில் அவர் அதிரடியாக விளையாடுவாரா? சிக்ஸர்களை பறக்க விடுவாரா? என்ற எதிர்பார்ப்புடன் அவரது ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
செய்தி சுருக்கம்: