இங்கிலாந்தில் இருந்து வரும் இளம் புயல்.. போட்டி போடும் சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ்!
Recommended Video
பெங்களூரு : இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் 2020க்காக இந்திய அணிகள் தற்போதே தயாராகிவருகின்றன. வரும் 19ம் தேதி இதற்கான ஏலம் நடைபெறவுள்ள நிலையில், தற்போது ஐபிஎல்லில் முக்கிய வீரர்களின் தேர்வு நடைபெற்று சில அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகின்றன.
டெல்லி கேபிடல்ஸ் உள்ளிட்ட அணிகள் அஸ்வின் போன்ற வீரர்களை தேர்ந்தெடுத்து அறிவித்துள்ள நிலையில், இங்கிலாந்தின் இளம் வீரர் டாம் பேன்டன் இந்த ஐபிஎல் ஏலத்தில் அனைவரது கவனத்தையும் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவரது சமீபத்திய சாதனைகள் சர்வதேச அளவில் அனைவரது புருவங்களையும் உயர்த்தியுள்ள நிலையில், இவரை தங்களது அணிக்காக ஏலம் எடுக்க மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் விசாரித்து வருகின்றன.

டிசம்பர் 19ம் தேதி ஏலம்
ஆண்டுதோறும் இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் போட்டிகள் உலக அளவில் ரசிகர்களை கொண்டுள்ளது. இந்த தொடரின்போது உலகின் முன்னணி வீரர்கள் இந்திய அணிகளுக்காக விளையாடுகின்றனர். இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான வீரர்கள் தேர்வு மற்றும் அதையொட்டிய ஏலம் வரும் டிசம்பர் 19ம் தேதி நடைபெறவுள்ளது.

சர்வதேச அளவில் கவனம்
இந்நிலையில் இங்கிலாந்தின் புதிய வரவான 21 வயது டாம் பேன்டன், இந்த ஐபிஎல் போட்டியில் விளையாடுவது உறுதியாகியுள்ளது. ஏற்கனவே இவர் குறித்து மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் தங்களது விசாரணையை துவக்கியுள்ளன.

28 பந்துகளில் 80 ரன்கள் குவிப்பு
அபுதாபியில் நடைபெற்றுவரும் டி10 தொடர் போட்டியில் கலந்தர் அணிக்காக விளையாடிய டாம் பேன்டன் 28 பந்துகளில் 80 ரன்களை குவித்து சர்வதேச அளவில் பலரின் கவனிப்பை பெற்றுள்ளார்.

ரன்களின் சராசரி 42.23
முன்னதாக டி20 போட்டிகளில் களம்கண்ட பேன்டன் 549 ரன்களை குவித்து சராசரியாக 42.23ஐ பெற்றுள்ளார். மேலும் ஸ்டிரைக் ரேட்டாக 161.43ஐயும் பெற்றுள்ளார்

ஏலத்திற்காக மகிழ்ச்சியுடன் காத்திருப்பு
இந்நிலையில் ஐபிஎல்லில் ஆடுவது தனது கனவு என்று தெரிவித்துள்ள பேன்டன், இதன்மூலம் அதிக ரசிகர்களின் கவனத்தை பெறமுடியும் என்று தெரிவித்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடுவதையும் மும்பையின் வான்கடே மைதானத்தில் விளையாடுவதையும் தான் விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

காத்திருப்பதாக அறிவிப்பு
வரும் 19ம் தேதி நடைபெறவுள்ள ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க தான் உற்சாகத்துடன் காத்திருப்பதாகவும், எந்த அணி தன்னை ஏலம் எடுக்கும் என்று தெரியும்வரை தன்னுடைய பதற்றம் குறையாது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications