மும்பை : 2024 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி கிட்டத்தட்ட பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழக்கும் நிலையில் உள்ளது. இதுவரை ஆடிய எட்டு போட்டிகளில் ஐந்து தோல்விகளை பெற்று புள்ளிப் பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது.
இனி வரும் ஆறு லீக் போட்டிகளிலும் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றால் மட்டுமே பிளே-ஆஃப் சுற்றுக்கே செல்ல முடியும் என்ற நிலை உள்ளது. அந்த அணியில் நல்ல வீரர்கள் இருந்தும், பலரும் சரியாக செயல்பட்டும் கூட மோசமான கேப்டன்சியால் அந்த அணி தோல்விகளை சந்தித்து வருவதாக கடும் விமர்சனம் எழுந்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா கடந்த பத்து ஆண்டுகளாக செயல்பட்டு வந்த நிலையில் அவர் அணியில் இருக்கும் போதே அவரை பதவி விலகச் செய்து ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்தது மும்பை இந்தியன்ஸ் அணி.
மும்பை இந்தியன்ஸ் அணியில் உலகின் முன்னணி வேகப் பந்துவீச்சாளரான பும்ரா இருக்கிறார். உலகின் நம்பர் 1 சர்வதேச டி20 பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் இடம் பெற்று இருக்கிறார். அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேனும், இந்திய அணியின் கேப்டனுமான ரோஹித் சர்மா இருக்கிறார். இவர்களைத் தவிர்த்து இஷான் கிஷன் மற்றும் திலக் வர்மா பேட்டிங்கில் நல்ல ஃபார்மில் உள்ளனர்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர்களாக பெரும் அனுபவம் கொண்ட தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் மார்க் பவுச்சர், டி20 கிரிக்கெட் ஜாம்பவான் கீரான் பொல்லார்ட், துல்லியமான பந்துவீச்சாளராக உலகை அச்சுறுத்திய லசித் மலிங்கா என மூவர் அணி உள்ளது. இப்படி அனைத்து சிறந்த வீரர்கள், சிறந்த பயிற்சியாளர்கள் குழுவை பெற்றும் கூட மும்பை இந்தியன்ஸ் அணி களத்தில் சரியாக செயல்படவில்லை.
அதற்கு முழு காரணமே ஹர்திக் பாண்டியா தான் என்ற விமர்சனம் எழுந்துள்ளது. கேப்டனாக அவர் பிற பந்துவீச்சாளர்களை நம்பாமல் இக்கட்டான நேரங்களில் தானே பந்து வீசி போட்டியை இன்னும் மோசமானதாக மாற்றி விடுகிறார். பேட்டிங்கில் சுத்தமாக பாண்டியா ஃபார்மில் இல்லை. மற்ற பேட்ஸ்மேன்கள் ரன் குவித்து சென்ற பின் களமிறங்கும் பாண்டியா பந்துகளை வீணடித்து போட்டிகளில் தோல்வியை பரிசாக கொடுத்து வருகிறார்.
பந்துவீச்சிலும் மற்ற பந்துவீச்சாளர்கள் குறைவாக ரன் கொடுத்து அழுத்தம் ஏற்படுத்தி வைத்த பின் பந்து வீசி அதிக ரன்களை விட்டுக் கொடுத்து போட்டியை எதிரணி பக்கமாக தாரை வார்த்து வருகிறார். இந்த காரணங்களை பட்டியலிட்டு மும்பை இந்தியன்ஸ் அணியின் மோசமான நிலைக்கு ஒரு வீரராகவும், கேப்டனாகவும் ஹர்திக் பாண்டியாவே காரணம் என கூறி வருகின்றனர் அந்த அணியின் ரசிகர்கள்.