மும்பை: 2026 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 221 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டி வரலாற்றுச் சாதனை படைத்தது. ஆனால், இந்த பிரம்மாண்ட வெற்றியை விட இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஏன் பீல்டிங் செய்ய வரவில்லை என்பதுதான் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய விவாதமாக மாறியது.
இந்தப் போட்டியில் சூர்யகுமார் யாதவ் 'இம்பாக்ட் பிளேயராக' மட்டுமே பயன்படுத்தப்பட்டார். அவர் பேட்டிங் மட்டும் செய்துவிட்டு, பீல்டிங் செய்ய மைதானத்திற்குள் வரவில்லை. இதனால், கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கும் சூர்யாவுக்கும் இடையே ஏதோ மோதல் நிலவுகிறது என்றும், அவர் வேண்டுமென்றே ஓரங்கட்டப்படுகிறார் என்றும் ரசிகர்கள் பல்வேறு வதந்திகளைப் பரப்பத் தொடங்கினர்.

இதற்கு மும்பை அணியின் தலைமை பயிற்சியாளர் மகிளா ஜெயவர்த்தனே அதிரடியாகப் பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "தயவுசெய்து தேவையில்லாத கதைகளை உருவாக்காதீர்கள். அணியில் அனைவரும் மகிழ்ச்சியாகவே உள்ளனர். சூர்யாவுக்கு இடுப்புப் பகுதியில் சிறிய தசைப்பிடிப்பு உள்ளது. அவருக்குக் கூடுதல் ஓய்வு தேவைப்பட்டதால் தான் இந்த முடிவை எடுத்தோம். அடுத்த போட்டிக்கு இன்னும் 5 நாட்கள் அவகாசம் இருப்பதால், அவர் முழுமையாகக் குணமடைய நேரம் கொடுத்தோம்" என்று விளக்கமளித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், "சூர்யா மைதானத்திற்குள் வந்து கடைசி 4 ஓவர்கள் பீல்டிங் செய்ய மிகவும் ஆர்வமாக இருந்தார். ஆனால், நான்தான் அவரைத் தடுத்தேன். அவர் எங்களுக்கு மிக முக்கியமான வீரர். சீசன் முழுவதும் அவர் விளையாட வேண்டும் என்பதால் முன்னெச்சரிக்கையாக இந்த முடிவை எடுத்தோம். இது நிர்வாக ரீதியாக எடுக்கப்பட்ட முடிவு, இதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை" என்று திட்டவட்டமாகக் கூறினார்.

இந்தப் போட்டியில் 3-வது வீரராகக் களம் இறங்கிய சூர்யகுமார் யாதவ் 8 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மா (78) மற்றும் ரையன் ரிகெல்டன் (81) ஆகியோரின் 148 ரன்கள் தொடக்க ஜோடி ஆட்டத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. பந்துவீச்சில் ஷர்துல் தாகூர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். மும்பை அணியின் இந்தத் விளக்கம் வதந்திகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.