லண்டன்: இங்கிலாந்தின் பிரபலமான 'தி ஹன்ட்ரட்' கிரிக்கெட் தொடரில், மும்பை இந்தியன்ஸின் சகோதர அணியான ஓவல் இன்வின்சிபில்ஸ், வரிசையாக மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற பரபரப்பான இறுதிப் போட்டியில், ட்ரென்ட் ராக்கெட்ஸ் அணியை 26 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஹாட்ரிக் கோப்பையை முத்தமிட்டது.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஓவல் இன்வின்சிபில்ஸ் அணி, 100 பந்துகளில் 5 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தூணாக விளங்கியவர், ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடும் நட்சத்திர ஆல்-ரவுண்டர் வில் ஜேக்ஸ். அதிரடியில் மிரட்டிய அவர், வெறும் 41 பந்துகளில் 72 ரன்கள் விளாசி அசத்தினார். அவருடன் ஜோர்டான் காக்ஸ் 28 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து அணிக்கு வலு சேர்த்தார்.

169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய ட்ரென்ட் ராக்கெட்ஸ் அணிக்கு, ஆஸ்திரேலிய வீரர் மார்கஸ் ஸ்டோனிஸ் நம்பிக்கை அளித்தார். தனி ஆளாகப் போராடிய அவர், 38 பந்துகளில் 64 ரன்கள் குவித்தார். இருப்பினும், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால், அந்த அணியால் 100 பந்துகளில் 8 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ஓவல் இன்வின்சிபில்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் நாதன் சவுட்டர், 20 பந்துகள் வீசி 25 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றி, ஆட்டநாயகன் விருதைத் தட்டிச் சென்றார்.
இந்த வெற்றியின் மூலம், ஓவல் இன்வின்சிபில்ஸ் அணி 2023, 2024 மற்றும் 2025 என வரிசையாக மூன்று ஆண்டுகள் கோப்பையை வென்று ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளது. உலக அளவிலான டி20 லீக் தொடர்களில், ஒரு அணி வரிசையாக மூன்று முறை கோப்பையை வெல்வது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன், லங்கா பிரீமியர் லீக் தொடரில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அணி 2020, 2021, 2022-ல் வரிசையாக மூன்று கோப்பைகளை வென்றிருந்தது.
பாகிஸ்தானின் சியால்கோட் ஸ்டாலியன்ஸ் அணி மட்டும் வரிசையாக ஐந்து முறை பட்டத்தை வென்று முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல்-ல் வெற்றிகரமான அணியாக வலம் வரும் மும்பை இந்தியன்ஸின் சகோதர அணியும், உலக கிரிக்கெட்டில் புதிய சகாப்தத்தை எழுதியிருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.