மும்பை: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தங்கள் அணி பந்துவீச்சில் பயன்படுத்திய திட்டம் ஒன்றைப் பற்றி விவரித்துள்ளார்.
அந்த திட்டத்தை வைத்துத் தான் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை ரன் குவிக்க விடாமல் செய்தோம் என ஹர்திக் பாண்டியா வெளிப்படையாகக் கூறினார். இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் மட்டுமே எடுத்தது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 200 ரன்களை எடுக்கும், 250 ரன்கள் எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 162 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 28 பந்துகளில் 40 ரன்களும், ஹென்ரிச் கிளாசன் 28 பந்துகளில் 37 ரன்களும் எடுத்திருந்தனர். இதனை அடுத்து 163 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய மும்பை இந்தியன்ஸ் 18.1 ஓவரிலேயே வெற்றி இலக்கை எட்டியது. நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மும்பை இந்தியன்ஸ் அணி.
இந்தப் போட்டிக்குப் பிறகு கேப்டன் ஹர்திக் பாண்டியா பேசுகையில், "குறிப்பாக இன்று நாங்கள் பந்துவீசிய விதம் மிகவும் புத்திசாலித்தனமாகவும், துல்லியமாகவும் இருந்தது. எங்களின் எளிய அடிப்படைத் திட்டங்களைச் சரியாகப் பின்பற்றினோம். சில வகை பந்துகளை அடித்து ஆடுவது பேட்ஸ்மேன்களுக்கு எளிதாக இல்லை என்பதை ஆடுகளத்தில் உணர்ந்தோம். பந்துவீச்சாளர்கள் அந்தத் திட்டத்தில் உறுதியாக நின்றது மிகவும் பாராட்டுக்குரிய செயல். இதன் மூலம் எதிரணியை ரன் குவிக்க விடாமல், அழுத்தத்திற்கு உள்ளாக்கினோம்," என்று பந்துவீச்சாளர்களைப் பாராட்டினார்.
தாங்கள் பயன்படுத்திய திட்டம் குறித்துப் பேசிய அவர், "ஆடுகளத்தைப் பொறுத்தவரை, பார்க்க நன்றாகத் தெரிந்தாலும், அதன் மேல் இருந்த புற்கள் காரணமாக பந்து சில சமயம் நின்று வந்தது. தீபக் வீசிய முதல் சில ஓவர்களிலேயே இது தெளிவாகத் தெரிந்தது. இதனால், இந்த விக்கெட்டில் வேகத்தை மாற்றி வீசுவது (Change of Pace) மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை நாங்கள் விரைவாக உணர்ந்தோம். அதைக் கண்டுபிடித்தவுடன், அதே நோக்கத்துடன் அதைச் செயல்படுத்தத் தொடங்கினோம். பந்துகளைக் கலந்து வீச முயற்சித்தோம். ஸ்லோ பந்துகள் ஆடுகளத்தில் கிரிப் ஆனாலும், அதைத் திரும்பத் திரும்ப ஒரே இடத்தில் வீசும்போது பேட்ஸ்மேன் கணிக்க வாய்ப்புள்ளது. ஆனால், அவர்களின் ரிதம் இழந்திருந்த மிடில் ஓவர்களில் யார்க்கர்களை மிகச் சிறப்பாகவும், புத்திசாலித்தனமாகவும் செயல்படுத்தினோம்," என்றார்.
26 பந்துகளில் 36 ரன்கள் சேர்த்து மும்பை அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றிய வில் ஜாக்ஸ் குறித்துப் பேசுகையில், "ஜாக்ஸின் தனிச்சிறப்பு என்னவென்றால், அவரிடம் மூன்று வகையான திறமைகள் ஒருங்கே அமைந்துள்ளன. அவர் ஒரு மிகச் சிறந்த ஃபீல்டர். முக்கியமான கட்டங்களில் பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்த முடியும். மேலும், பேட்டிங்கில் அவரிடம் நிறைய அதிரடித் திறமை உள்ளது. இந்த அனைத்துத் திறமைகளால்தான் அவர் அணியில் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறார். நாங்கள் அவரை எப்போதும் முழுமையாக ஆதரிக்கிறோம். இன்று அது அவருக்குச் சிறப்பாகக் கை கொடுத்தது குறித்து நான் தனிப்பட்ட முறையில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்," என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
சேஸிங் உத்தி குறித்துப் பேசிய ஹர்திக் பாண்டியா, "போட்டியின் போது 42 பந்துகளில் 42 ரன்கள் தேவைப்பட்டபோது, அது சற்று இக்கட்டான சூழ்நிலை என உணர்ந்தோம். அந்த நேரத்தில் அவசரப்படாமல், பொறுமையாக விளையாட முடிவு செய்தோம். தேவையற்ற விக்கெட்டுகளை இழந்து திடீரென தடுமாறி, வெற்றி வாய்ப்பை இழந்துவிடக்கூடாது என்பதில் நாங்கள் தெளிவாக இருந்தோம். அந்த தருணத்தில், ஒன்று அல்லது இரண்டு ஓவர்கள் பொறுமையாகச் சென்று நிலைமையை சீர் செய்யலாம் எனத் தீர்மானித்தோம். பவுண்டரிகள் தானாகவே கிடைக்கும், அவை வரத் தொடங்கியவுடன் எதிரணியின் அழுத்தம் குறையும் என்பதை நாங்கள் உணர்ந்திருந்தோம். போட்டியின் முடிவில், நாங்கள் அதற்கேற்ப வேகத்தை அதிகரித்து வெற்றியை உறுதி செய்தோம்," என்று விளக்கமளித்தார்.
அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டி குறித்த எதிர்பார்ப்பைப் பகிர்ந்த ஹர்திக் பாண்டியா, "அடுத்த போட்டி ஒரு மிகச் சிறந்த ஆட்டமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. மைதானம் ரசிகர்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம். அந்தப் போட்டிக்குத் தயாராகும் வகையில், நாங்கள் அனைவரும் நன்றாக ஓய்வெடுப்பதை உறுதி செய்துள்ளோம்," என்று கூறி முடித்தார்.
இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் துவக்க வீரர் ரியான் ரிக்கெல்டன் 23 பந்துகளில் 31 ரன்கள் குவித்து இருந்தார். அவர் தனது ஆட்டம் பற்றி பேசுகையில் "30 ரன்கள் அதிகம் என்று சொல்ல மாட்டேன், ஆனால் பங்களித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இன்னும் ஒரு பெரிய ஸ்கோருக்காக ஆவலாக இருக்கிறேன். இன்று இரவு ஆடுகளம் அவ்வளவு எளிதாக இல்லை, ஆனால் பந்துவீச்சில் நாங்கள் நன்றாக சரிசெய்து கொண்டோம், நிச்சயமாக வெற்றி பெற்றது மகிழ்ச்சி."
"தென்னாப்பிரிக்காவிலிருந்து வந்து இந்த ஆடுகளத்தின் சூழ்நிலைக்கு பழகுவது மிகவும் கடினம். சிறந்த வீரர்கள் நிறைந்த குழுவில் இருந்ததால் எனக்கு அடிப்படை அறிவும் கொஞ்சம் புரிதலும் இருக்கிறது. என் ஆட்டத்தில் உள்ள சிறிய விஷயங்களை சரி செய்ய முயற்சிப்பதுதான் முக்கியம். இன்று இரவு நான் சில விஷயங்களைக் கண்டுபிடித்தேன், அது பற்றி சம்பந்தப்பட்ட வீரர்களிடம் பேச வேண்டும். இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. என் ஆட்டத்தை நான் தொடர்ந்து வளர்த்துக் கொண்டால், அது எதிர்காலத்தில் எனக்கு சாதகமாக அமையும்."
"நாங்கள் இரண்டாவது பேட்டிங் செய்தது நிச்சயமாக உதவியது. அதுதான் டி20 கிரிக்கெட்டின் இயல்பு. ஒரு நல்ல ஸ்கோர் எது என்று கணித்து முடிவு செய்வது கடினம். எங்களிடம் பும்ரா, ஹார்திக் மற்றும் சூர்யா, பவுல்ட் போன்ற அனுபவமிக்க வீரர்கள் உள்ளனர். இன்று பந்துவீச்சில் புத்திசாலித்தனம் வெளிப்பட்டது, இருப்பினும் அவர்களை இன்னும் குறைவான ஸ்கோரில் கட்டுப்படுத்தியிருக்கலாம் என்று நினைக்கிறேன். இங்கே கொஞ்சம் சத்தமாக இருக்கிறது. இந்த இரைச்சல் எனக்கு எப்போதும் ஒருவித கலவையான உணர்வாக இருக்கும், ஆனால் நான் இப்போது பழகி வருகிறேன். உண்மையிலேயே இதை அனுபவிக்கிறேன். விளையாடுவதற்கு இது ஒரு சிறந்த அணி, இது ஒரு சிறந்த இடம்." என்றார் ரியான் ரிக்கெல்டன்