42வது முறையாக கோப்பை வெல்ல மும்பை தயார்
மும்பை: இந்த ஆண்டுக்கான ரஞ்சிக் கோப்பை போட்டிகளின் காலிறுதிக்கு மும்பை முன்னேறியுள்ளது. இதுவரை 41 முறை ரஞ்சிக் கோப்பை சாம்பியனான மும்பை மிகவும் வலுவான அணியாக உள்ளதால், 42வது முறையாகவும் கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது
சர்வதேசப் போட்டிகளில் விளையாடிய முதல் இந்தியரான ரஞ்சித்சிங்ஜி நினைவாக, 1934 முதல் ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், 21 மாநிலங்கள் உள்பட, 28 அணிகள் பங்கேற்கின்றன. தற்போதைய சாம்பியன் குஜராத் அணியாகும்.
இந்த ஆண்டுக்கான லீக் போட்டிகள் சுற்று இன்றுடன் முடிவடைய உள்ளது. இந்த நிலையில், சி பிரிவில் தனது கடைசி லீக் ஆட்டத்தில் திரிபுராவை, 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்று, மும்பை, கால் இறுதிக்கு முன்னேறியது.

மும்பை 41 முறை சாம்பியன்
41 முறை சாம்பியனான மும்பை, வெற்றிக்கு, 63 ரன்கள் தேவை என்ற நிலையில், நேற்று நடந்த ஆட்டத்தில், 6.2 ஓவர்களிலேயே வென்றது. இந்த சீசனில் அதிரடியாக விளையாடி வரும் பிருத்வி ஷா, ஆட்டமிழக்காமல் 50 ரன்கள் எடுத்தார். இதன் மூலம், மும்பைக்கு போனசுடன் சேர்த்து 7 புள்ளிகள் கிடைத்தது. சி பிரிவில் இரண்டாவது இடத்தில் இருந்த மும்பை, மொத்தம் 21 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறி, காலிறுதிக்கு தகுதி பெற்றது.

காலிறுதி வாய்ப்பு தமிழகத்துக்கு இல்லை
இரண்டாவது இடத்துக்கு ஆந்திரா, மத்தியப் பிரதேசம் அணிக்கு இடையே போட்டி உள்ளது. இதே சி பிரிவில் உள்ள தமிழக அணிக்கு கால் இறுதி வாய்ப்பு இல்லை. கடந்த ஆண்டு அரை இறுதி வரை தமிழக அணி முன்னேறியது.

யாருக்கு வாய்ப்பு உள்ளது
தற்போதைய நிலையில் ஏ பிரிவில் கர்நாடகா, 26 புள்ளிகளுடனும், டில்லி 24 புள்ளிகளுடனும் உள்ளன. அவை காலிறுதிக்கு ஏற்கனவே நுழைந்து விட்டன. பி பிரிவில் குஜராத், 27 புள்ளிகள், கேரளா, 24 புள்ளிகள், சவுராஷ்டிரா 23 புள்ளிகளுடன் உள்ளன. கடைசி சுற்று லீக் ஆட்டத்துக்குப் பிறகே, பி பிரிவில் எந்த அணிக்கு கால் இறுதி வாய்ப்பு என்பது தெரியவரும்.

முதல் முதலாக கால் இறுதி
டி பிரிவில் 28 புள்ளிகளுடன் விதர்பா அணி தான் முதல் முதலாக கால் இறுதிக்கு முன்னேறியது. பெங்கால், பஞ்சாப், ஹிமாச்சலப் பிரதேச அணிகளில் யார் கால் இறுதிக்கு நுழையப் போகிறார்கள் என்பதை கடைசி சுற்று ஆட்டங்களுக்குப் பிறகே தெரிய வரும்.


Click it and Unblock the Notifications