மலை போல் நின்ற ஜெய்ஷ்வால்.. முதல் ரன் எடுக்க இத்தனை பந்துகளா..? டிராவிட் சிஷ்யனு நிரூபிச்சிட்டாரு
பெங்களூரு: ரஞ்சி கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் ஜெய்ஷ்வால் செய்த சாகசம் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
உத்தரப் பிரதேச அணிக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் முதலில் மும்பை அணி பேட் செய்தது.
இதில் கேப்டன் பிரித்வி ஷா டக் அவுட் ஆக, மும்பை அணி தடுமாறியது,. எனினும் முதல் இன்னிங்சில் ஜெய்ஷ்வால் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

முதல் இன்னிங்ஸ் சதம்
சர்பிராஸ் கான் 40 ரன்கள் எடுக்க, ஜெய்ஷ்வால் சதம் விளாசினார். பின்னர் ஹர்திக் தாமூர் 113 ரன்கள் எடுக்க, மும்பை அணி முதல் இன்னிங்சில் 393 ரன்கள் எடுத்தது. இதன் பின்னர் உத்தரப்பிரதேச அணி முதல் இன்னிங்சில் விளையாடியது. இதில் எந்த ஒரு பேட்ஸ்மேன்களும் அரைசதம் அடிக்கவில்லை. சிஎஸ்கே பந்துவீச்சாளர் துஷார் தேஷ்பாண்டே 3 விக்கெட்டுகளை எடுக்க, அந்த அணி முதல் இன்னிங்சில் 180 ரன்களுக்கு சுருண்டது.

டிரா செய்தாலே வெற்றி
133 ரன்கள் முன்னிலை பெற்ற மும்பை அணி 3வது நாள் ஆட்டத்தில் மும்பை அணி தனது 2வது இன்னிங்சில் களமிறங்கியது. முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றதால், மும்பை அணி இறுதிப் போட்டிக்கு செல்வது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. இதனால் இந்தப் போட்டியை டிரா செய்தாலே மும்பை அணிக்கு போதுமானதாகும்.

ஜெய்ஷ்வால் சாகசம்
இதனால், ஜெய்ஷ்வால் நங்கூரம் போட்டு ஆடுகளத்தில் மலை போல் நின்று பேட்டிங் செய்தார். ராகுல் டிராவிட் , ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தின் போது ஒரு ரன்னில் இருந்து அடுத்த ரன் எடுப்பதற்கு 50 பந்துகளை எடுத்து கொண்டார். தற்போது அதே போன்ற ஒரு சாகசத்தை தான் அவரது சிஷ்யனான ஜெய்ஷவால் செய்துள்ளார்.

54வது பந்தில் முதல் ரன்
ஒரு ரன் கூட எடுக்காமல் ஆட்டமிழக்காமல் பந்துகளை சந்தித்து வந்த ஜெய்ஷ்வால் 53 பந்துகளை எதிர்கொண்டும் ஒரு ரன் கூட எடுக்கவில்லை. இதனால் உத்தரப் பிரதேச அணி வீரர்கள் எப்பா, ஆள விடுடா சாமி என்ற ரெஞ்ச்க்கு சென்றுவிட்டனர். இதனையடுத்து 54வது பந்தில் தான் முதல் ரன் எடுத்தார். இதனையடுத்து, மும்பை அணி வீரர்களும், களத்தில் நின்ற உபி வீரர்களும் கை தட்ட, தனது பேட்டை உயர்த்தி ஜெய்ஷ்வால் காட்டினார்.


Click it and Unblock the Notifications