ஒரே ஓவரில் 5 சிக்சர்.. மும்பை இந்தியன்ஸ் வீரர் நமன் தீர் அதிரடி.. 37 பந்தில் 91 ரன்கள் குவிப்பு
மொஹாலி: ஷெர்-இ-பஞ்சாப் டி20 லீக் 2026 தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரரும், அமிர்தசரஸ் சூர்மாஸ் அணியின் கேப்டனுமான நமன் தீர் ஒரே ஓவரில் ஐந்து சிக்ஸர்களை விளாசி அதிரடி காட்டியுள்ளார். மொஹாலி கிங்ஸ் அணிக்கு எதிராக சமொஹாலியில் நடைபெற்ற இப்போட்டியில் இந்த சாதனை அரங்கேறியது.
போட்டியின் ஐந்தாவது ஓவரை வீச மொஹாலி கிங்ஸ் அணியின் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் ஹர்ஷ்தீப் சிங் வந்தார். அந்த ஓவரின் முதல் பந்திலேயே லாங்-ஆன் திசையில் நமன் தீர் சிக்ஸர் அடித்தார். இரண்டாவது பந்தில் மிட்-விக்கெட்டுக்கும் லாங்-ஆனுக்கும் இடையே மற்றுமொரு சிக்ஸரை பறக்கவிட்ட அவர், மூன்றாவது பந்திலும் லாங்-ஆன் திசைக்கு மேல் சிக்ஸர் அடித்து அசத்தினார்.

நான்காவது பந்து ரன் ஏதுமின்றி டாட் பாலாக அமைந்த நிலையில், கடைசி இரண்டு பந்துகளையும் அடுத்தடுத்து சிக்ஸர்களாக மாற்றி, அந்த ஓவரில் மட்டும் மொத்தம் 30 ரன்களைக் குவித்தார்.170 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய அமிர்தசரஸ் சூர்மாஸ் அணிக்கு, கேப்டனாக முன்னின்று வழிநடத்திய நமன் தீர் 37 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 91 ரன்கள் குவித்து விளாசினார்.
இவரது அதிரடியான ஆட்டத்தால், அமிர்தசரஸ் சூர்மாஸ் அணி 16.3 ஓவர்களில் இலக்கை எட்டி, 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. ஷெர்-இ-பஞ்சாப் டி20 லீக் 2026 தொடரில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் நமன் தீர் தற்போது முதலிடத்தில் உள்ளார். அவர் 9 இன்னிங்ஸ்களில் விளையாடி 78.25 சராசரி மற்றும் 216.61 ஸ்டிரைக் ரேட்டுடன் மொத்தம் 626 ரன்கள் எடுத்துள்ளார்.
இதில் இரண்டு அரைசதங்கள், ஒரு சதம் மற்றும் 45 சிக்ஸர்கள் அடங்கும். இத்தொடரில் அவரது சிறந்த ஸ்கோர் 173 (64 பந்துகள், 16 பவுண்டரிகள், 12 சிக்ஸர்கள்) ரன்கள் ஆகும். இந்த இமாலய இன்னிங்ஸும் கடந்த செப்டம்பர் 8 அன்று மொஹாலி கிங்ஸ் அணிக்கு எதிரான 18-வது லீக் ஆட்டத்திலேயே பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஜலந்தர் வாரியர்ஸ் அணியின் கேப்டன் பிரப்சிம்ரன் சிங் இப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். அவர் 8 இன்னிங்ஸ்களில் 85.33 சராசரி மற்றும் 203.98 ஸ்டிரைக் ரேட்டுடன் 512 ரன்கள் எடுத்துள்ளார். இதில் இரண்டு அரைசதங்களும், இரண்டு சதங்களும் அடங்கும். லுதியானா லயன்ஸ் அணிக்கு எதிரான இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் அவர் விளையாட உள்ளார்.
மொஹாலி கிங்ஸ் அணியின் அன்மோல்ப்ரீத் சிங் 9 இன்னிங்ஸ்களில் 62.13 சராசரி மற்றும் 195.67 ஸ்டிரைக் ரேட்டுடன் நான்கு அரைசதங்கள் மற்றும் ஒரு சதத்துடன் 497 ரன்கள் குவித்து இப்பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications


