என்னங்க சொல்றீங்க.. இந்தியா - ஆஸி,டெஸ்டில் திடீர் மாற்றம்.. கடைசி நேர தலைவலி.. பிசிசிஐ அவசர மீட்டிங்
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் மழையினால் திடீர் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் போட்டியின் விவரங்களையே இன்னும் முடிவு செய்ய முடியாமல் பிசிசிஐ குழம்பியுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் கடந்த 9ம் தேதியன்று தொடங்கியது. நாக்பூரில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட தொடரில் 1 - 0 என இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து 2வது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 17ம் தேதியன்று டெல்லியில் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

புதிய குழப்பம்
ஆனால் தற்போது பிரச்சினை ஏற்பட்டுள்ளது 3வது டெஸ்ட் போட்டியில் தான். இந்த போட்டி வரும் மார்ச் 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை தரம்சாலாவில் உள்ள மைதானத்தில் நடைபெறவிருந்தது. ஆனால் திடீரென அந்த மைதானம் சர்வதேச போட்டிகளை நடத்துவதற்கான தகுதி இல்லை எனவும் வேறு மைதானத்திற்கு போட்டியை மாற்ற ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் பிசிசிஐ அதிகாரி கூறியுள்ளார்.

என்ன நடந்தது?
2023ம் ஆண்டுக்கான 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நவம்பர் மாதம் இந்தியாவில் தான் நடைபெறவுள்ளது. இதற்காக இந்தியாவில் உள்ள பெரும்பாலான மைதானங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் தான் தரம்சாலா மைதானமும் புணரமிக்கப்பட்டது. ஆனால் திடீரென அங்கு வெளுத்து வாங்கிய மழையால் அவுட் ஃபீல்ட் மட்டும் மிக மோசமாக மாறிவிட்டது.

காரணம் என்ன
அதாவது மைதானத்தில் புற்களை செயற்கையாக உருவாக்குவார்கள். அங்கு கடும் குளிரும், மழையும் இருந்து வருவதால் சரிவர மண்ணில் அவை ஒட்டவில்லை. இது பவுண்டரிகள் செல்வதற்கு ஏற்றதாக இருக்காது. மைதானத்தில் உள்ள மற்ற உட்கட்டமைப்பு பணிகள் அனைத்தும் வேகமாக முடிவடைந்த போதும், இன்னும் 2 வாரத்தில் இந்த பிரச்சினை சரிசெய்ய முடியாத சூழல் உள்ளது. எனவே போட்டியை வேறு இடத்திற்கு மாற்ற ஆலோசனை நடந்து வருகிறது.

மாற்று மைதானம்
தர்மசாலாவை விட்டால், இந்த போட்டியை நடத்துவதற்கு விசாகப்பட்டினம், புனே, இந்தூர் போன்ற மைதானங்கள் டெஸ்ட் போட்டியை நடத்துவதற்கு தயாராக உள்ளன. எனவே இதுகுறித்து முடிவெடுக்க உயர்மட்ட குழு ஆலோசனை நடத்தி வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களுக்குள் இதற்கான அறிவிப்பு வெளியாகி டிக்கெட் விற்பனைகளும் தொடங்கலாம்.


Click it and Unblock the Notifications