தங்கம், வெள்ளி இரண்டும் இந்தியாவுக்கே.. ஆசிய பாரா பேட்மிண்டன் இறுதியில் பகத்தை வீழ்த்திய நிதேஷ்
நகோயா: ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் எஸ்எல்3 பிரிவு இறுதிப்போட்டியில் இந்திய வீரர்கள் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்றனர். இந்த இறுதிப் போட்டியில் இந்திய வீரர்கள் இருவர் நேருக்கு நேர் மோதினர். சக இந்திய வீரரான பிரமோத் பகத்தை 21-18, 21-16 என்ற நேர் செட்களில் வீழ்த்தி இந்தியாவின் நிதேஷ் குமார் தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார். இதன் மூலம் இந்தியாவுக்கு ஒரே போட்டியில் தங்கமும் வெள்ளியும் கிடைத்தது.
தொடக்கத்திலிருந்தே அனல் பறந்த இந்த இறுதி ஆட்டத்தில், இரண்டு இந்திய வீரர்களும் ஒவ்வொரு புள்ளிக்கும் கடுமையாகப் போராடினர். இருவரும் சர்வதேச சாம்பியன்கள் என்பதால் ஆட்டம் முழுவதும் விறுவிறுப்பாக சென்றது. கடும் அழுத்தத்திற்கு மத்தியில், முதல் செட்டை 21-18 என்ற கணக்கில் அபாரமாக வென்ற நிதேஷ் குமார் முன்னிலை பெற்றார். தொடர்ந்து நடைபெற்ற 2-வது செட்டிலும் வேகத்தைக் காட்டிய அவர், அனுபவ வீரரான பிரமோத் பகத்தின் தாக்குதல்களை முறியடித்து 21-16 என்ற கணக்கில் ஆட்டத்தை முடித்து தங்கத்தை வென்றார். இதனால் பிரமோத் பகத்திற்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.

தங்கம் வென்ற நிதேஷ் குமார் ஏற்கனவே சர்வதேச அரங்கில் முத்திரை பதித்தவர். கடந்த 2024 பாரிஸ் பாராலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்த இவர், தற்போது ஆசிய பாரா தொடரிலும் தனது அசைக்க முடியாத பலத்தை நிரூபித்துள்ளார். மறுபுறம் 2020 டோக்கியோ பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற மூத்த வீரரான பிரமோத் பகத்தை வீழ்த்தி நிதேஷ் சாம்பியன் பட்டம் வென்றது, சர்வதேச பாரா பேட்மிண்டனில் அவரது புதிய சகாப்தம் தொடங்கியுள்ளதைக் காட்டுகிறது.
ஒரே போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளி என 2 பதக்கங்களையும் இந்திய வீரர்களே அள்ளிக் குவித்து, பதக்கப் பட்டியலில் இந்திய அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். 2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் இந்திய வீரர்கள் தொடர்ந்து அதிக அளவில் பதக்கங்களை வென்று வருவது விளையாட்டு ரசிகர்களை எல்லையற்ற மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


Click it and Unblock the Notifications

