அவரோட இடத்தில் நானா.. கோர்த்துவிடாதீங்க.. விராட் கோலி யாருனு தெரியுமா.. ஸ்ரேயாஸ் ஐயர் ஓபன் டாக்!
இந்தூர்: ஜாம்பவான் வீரர்களில் ஒருவரான விராட் கோலியிடம் இருந்து நம்பர் 3 பேட்டிங் வரிசையை தட்டி பறிப்பதெல்லாம் கனவிலும் நடக்காது என்று இந்திய அணியின் இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி டிஎல்எஸ் விதிமுறைப்படி 99 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 399 ரன்கள் குவித்தது. இந்திய அணியின் ஸ்ரேயாஸ் ஐயர் 105 ரன்களும், சுப்மன் கில் 104 ரன்களும் விளாசினர்.

தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்த போது மழை குறுக்கிட்டது. இதனால் ஆஸ்திரேலிய அணி 33 ஓவர்களில் 317 ரன்கள் விளாச வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதன்பின் ஆடிய ஆஸ்திரேலிய அணி 28.2 ஓவர்களில் 217 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. இந்திய அணி தரப்பில் அஸ்வின் மற்றும் ஜடேஜா தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதையடுத்து ஆட்டநாயகனாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்பட்டார். இதன்பின் ஸ்ரேயாஸ் ஐயர் பேசுகையில், இன்றைய ஆட்டத்தால் உற்சாகமாக இருக்கிறேன். இந்திய அணி வீரர்கள், நண்பர்கள், குடும்பத்தினர் அனைவருக்கும் எனக்கு ஆதரவாக இருந்துள்ளனர். தொலைக்காட்சியில் ஒவ்வொரு முறை கிரிக்கெட் போட்டியை பார்க்கும் போது, நானும் களத்தில் இருக்க வேண்டும் என்று நினைப்பேன்.

எனது உடலில் காயங்கள் நிச்சயம் மீண்டும் ஏற்படும். ஆனால் என் குறிக்கோள் என்ன என்பது நன்றாக தெரியும். இன்றைய போட்டியின் எனது பேட்டிங்கின் போது நான் திட்டமிட்டதை சரியாக செயல்படுத்தினேன். நான் எப்போது பேட்டிங் செய்ய களமிறங்கினாலும், எதை குழப்பிக் கொள்ள மாட்டேன். பந்தை சரியாக பார்க்க முடிந்தாலே சிறிது நேரத்தில் களத்தில் விளையாடினாலே, எனக்கான நம்பிக்கையை பெற்றுவிடுவேன்.
இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் விளையாட தயாராகவே இருக்கிறேன். எப்போது எந்த சூழலில் அணி நிர்வாகம் களமிறக்கினாலும் விளையாடுவேன். நம்பர் 3ல் சதம் விளாசி இருப்பதால், விராட் கோலியின் இடத்தை யாரும் ஈடு செய்ய முடியாது. மிகச்சிறந்த ஜாம்பவான் வீரர்களில் விராட் கோலியும் ஒருவர். அவரிடம் இருந்து நம்பர் 3 வரிசையை தட்டி பறிக்க வாய்ப்பே இல்லை. என்னை பொறுத்தவரை தொடர்ந்து ரன்கள் சேர்க்க வேண்டும் என்பதே விருப்பம் என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications