சென்னை: 2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய போட்டியில் மிகப்பெரிய திருப்புமுனையாக இருந்தார் ஆப்கானிஸ்தான் ஸ்பின்னர் நூர் அகமது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இவரை 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் 10 கோடி ரூபாய்க்கு வாங்கியிருந்தது. இவர் ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஆவார்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இவர் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்பதை சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் நம்பியது. அதை முதல் போட்டியிலேயே நிரூபித்து இருக்கிறார் நூர் அகமது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஒரு கட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விக்கெட் எடுக்க முடியாமல் திணறியது.

முதல் மூன்று விக்கெட்டுகளை இழந்த நிலையில் அந்த அணி பெரிய ஸ்கோரை நோக்கி சென்றது. சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா கூட்டணி அமைத்து 51 ரன்கள் சேர்த்தனர். நூர் அகமது சூர்யகுமார் யாதவின் முக்கிய விக்கெட்டை வீழ்த்தி முதல் திருப்புமுனையை அளித்தார்.
அதன் பின்னர் திலக் வர்மா விக்கெட்டையும், அடுத்து வந்த ராபின் மின்ஸ் விக்கெட்டையும் அடுத்தடுத்து வீழ்த்தினார். இதை அடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி தடுமாறத் தொடங்கியது. கடைசி நேரத்தில் நமன் திர் 12 பந்துகளில் 17 ரன்களும், தீபக் சாஹர் 15 பந்துகளில் 28 ரன்களும் சேர்த்ததால் மும்பை இந்தியன்ஸ் 155 ரன்கள் எடுத்தது.
நமன் திர் விக்கெட்டையும் நூர் முகமது வீழ்த்தினார். ஒருவேளை நூர் அகமது வீழ்த்திய நான்கு விக்கெட்டுகள் சிஎஸ்கே அணிக்கு உரிய நேரத்தில் கிடைக்காமல் போயிருந்தால், மும்பை இந்தியன்ஸ் இந்த போட்டியில் 170 முதல் 180 ரன்கள் வரை குவித்திருக்கும். அது சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும்.
அந்த வகையில் நூர் அகமதுவின் பந்துவீச்சு இந்த போட்டியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அவர் நான்கு ஓவர்களில் 18 ரன்கள் விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். 156 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய சிஎஸ்கே அணி 19.1 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது. இந்தப் போட்டியின் முடிவில் நூர் அகமது ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.
செய்தி சுருக்கம்: