மும்பை: கிரிக்கெட் வரலாற்றில் சச்சினின் சாதனைகள் பக்கம் பக்கமாக இருக்கின்றன.. இப்போது ட்விட்டர் எனும் சமூக வலைதளத்திலும் சாதனை படைத்திருக்கிறார் சச்சின் டெண்டுல்கர்.
கால் நூற்றாண்டுகாலமாக இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்று சாதனைகள் பல படைத்த சச்சின் டெண்டுல்கர், தற்போது மும்பையில் நடைபெறும் 200வது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெற இருக்கிறார்.

இதையொட்டி ThankYouSachin என்ற பெயரில் இந்திய கிரிக்கெட் வாரியம் ட்விட்டரில் ஒரு முகப்பு பக்கத்தை துவக்கி இருந்தது. இந்த பக்கத்தில் இதுவரை சுமார் 18,03,388 பேர் இப்பக்கத்தில் பதிவுகளை பதிவிட்டிருக்கின்றனர்.
இந்த ட்விட்டர் பக்கத்துக்கும் தமக்கு 24 ஆண்டுகாலமாக ஆதரவு தெரிவித்தமைக்கும் சச்சின் நன்றி தெரிவித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த ட்விட்டர் செய்திதான் சரித்திரம் படைத்திருக்கிறது. இன்று பகல் வரை சச்சினின் இந்த செய்தியை 9,574 பேர் ரீட்வீட் செய்துள்ளனர். 5,824 பேர் பேவரைட் ஆப்சனை க்ளிக் செய்திருக்கின்றனர்.
இவ்வளவு எண்ணிக்கையில் இந்தியாவில் ஒரு பதிவு ரீட்வீட் செய்யப்படுவது இதுதான் முதல் முறை என்று அறிவித்திருக்கிறது ட்விட்டர் இந்தியா.
டெண்டுல்கரின் ட்விட்டர் பக்கத்தை பாலோ செய்கிறவர்கள் எண்ணிக்கை 3,840,799 என்பது குறிப்பிடத்தக்கது.