உலகிலேயே எந்த கிரிக்கெட் வீரரும் செய்யாத மெகா சாதனை.. வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப் ரெக்கார்டு
நேப்பியர்: நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப் புதன்கிழமை (நவம்பர் 19) அன்று அடித்த ஒரு சதத்தின் மூலம், அவர் இரண்டு பிரம்மாண்டமான சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். ஆனால், அவரது இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இன்னிங்ஸ், அணியின் வெற்றிக்கு உதவவில்லை என்பது பெரும் சோகமாக அமைந்தது.
நேப்பியரில் உள்ள மெக்லீன் பார்க் மைதானத்தில் நியூசிலாந்துக்கு எதிராக ஷாய் ஹோப் 109 ரன்கள் குவித்து சதம் நிறைவு செய்து இருந்தார். இது கிரிக்கெட் உலகில் இதுவரை எந்த ஒரு வீரரும் செய்யாத ஒரு மகத்தான சாதனையை அவருக்குப் பெற்றுத் தந்துள்ளது. இதன் மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் தற்போதுள்ள 11 முழுநேர உறுப்பு நாடுகளுக்கு எதிராகவும் சதம் அடித்த முதல் மற்றும் ஒரே வீரர் என்ற உலக சாதனையை ஷாய் ஹோப் படைத்துள்ளார்.

ஷாய் ஹோப் சதம் அடித்த நாடுகள்: ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஜிம்பாப்வே, வங்கதேசம், அயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான்.
அதே இன்னிங்ஸின் மூலம், ஷாய் ஹோப் மற்றொரு முக்கிய மைல்கல்லையும் எட்டினார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக, ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்தவர் என்ற ஜாம்பவான் பிரையன் லாராவின் சாதனையை அவர் முறியடித்தார்.
பிரையன் லாரா, வெஸ்ட் இண்டீஸ் கேப்டனாக 125 ஒருநாள் போட்டிகளில் 5 சதங்கள் அடித்திருந்தார். ஷாய் ஹோப், தனது 43-வது ஒருநாள் போட்டியிலேயே கேப்டனாகத் தனது 6-வது சதத்தை அடித்து ஜாம்பவான் பிரையன் லாராவை முந்தியுள்ளார்.
இந்தச் சதம், ஷாய் ஹோப்பின் 19-வது ஒருநாள் சதமாகும். இதன் மூலம், வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அதிக ஒருநாள் சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் பிரையன் லாராவின் (19 சதங்கள்) சாதனையை அவர் சமன் செய்துள்ளார். இந்த பட்டியலில் கிறிஸ் கெயில் (25 சதங்கள்) மட்டுமே அவருக்கு முன்னிலையில் உள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனாக அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில், இலங்கையின் குமார் சங்கக்காரா (23) மற்றும் தென் ஆப்பிரிக்காவின் குயின்டன் டி காக் (32) ஆகியோருக்குப் பிறகு ஹோப் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
மனமுடைந்த ஷாய் ஹோப்
இந்தப் போட்டி மழையால் 34 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் செய்தபோது 4-ம் வரிசையில் களமிறங்கிய ஷாய் ஹோப், வெறும் 69 பந்துகளில் 13 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 109 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவரது அதிரடியால், வெஸ்ட் இண்டீஸ் அணி 34 ஓவர்களில் 248 ரன்கள் எடுத்தது.
இந்த இலக்கை நியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில், மூன்று பந்துகள் மீதமிருந்த நிலையில் எட்டி வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் அணி தோற்ற போதிலும், ஆட்ட நாயகன் விருது ஷாய் ஹோப்புக்கே வழங்கப்பட்டது. போட்டிக்குப் பிறகுப் பேசிய ஷாய் ஹோப், தனது தனிப்பட்ட சாதனையை விட அணியின் தோல்வியே தனக்கு வருத்தமளிப்பதாகக் கூறினார்.
"நான் நூறு ரன் அடித்ததை விட, அணி தோற்றதைத்தான் பார்க்கிறேன். ஒருவேளை நான் 120 அல்லது 130 ரன்கள் அடித்திருந்தால் அணி வென்றிருக்குமோ என்றுதான் நினைக்கிறேன். நான் சதம் அடித்து அணி தோற்பதை விட, 2 ரன்கள் அடித்து அணி வெல்வதையே விரும்புவேன். அதுதான் என் குணம். நான் வெற்றி பெறுவதை மட்டுமே விரும்புகிறேன். சதம் அல்லது அரைசதம் என்பது எனக்கு ஒரு பொருட்டல்ல" என்று அவர் உருக்கமாகத் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications