அந்த நாள் ஞாபகம்.. வங்கதேசத்திற்கு எதிராக.. திக்கித் திணறி சச்சின் போட்ட.. 100வது செஞ்சுரி
மும்பை: இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் கடவுள் என புகழப்படும் சச்சின் டெண்டுல்கர் தனது 100வது சதம் போட்ட நாள் இன்று. இதே நாளில்தான் கடந்த 2012ம் ஆண்டு வங்கதேசத்திற்கு எதிராக சச்சின் தனது 100வது சர்வதேச சதத்தைப் பதிவு செய்தார்.
Recommended Video
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாமல் சர்வதேச ரசிகர்களுக்கும் மறக்க முடியாத ஆண்டுதான் 2012. வங்கதேசத்திற்கு எதிராக டாக்காவில் இந்தியா அப்போது ஆசிய லீக் போட்டியில் கலந்து கொண்டு ஆடியது. அந்த போட்டியில்தான் சச்சின் தனது 100வது சர்வதேச சதத்தை அடித்தார்.
சச்சின் ஒரு நாள் போட்டிகளில் 49 சதங்களையும், டெஸ்ட் போட்டிகளில் 51 சதமும் அடித்துள்ளார். டி 20 போட்டிகளில் அவர் சதம் போட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியாவில் பலத்த அடி
ஆசிய கோப்பை போட்டிக்கு முன்னதாக ஆஸ்திரேலியாவில் இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது. அந்தத் தொடரிலேயே தனது 100வது சதத்தை சச்சின் பதிவு செய்வார் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. ஆனால் அந்தத் தொடரில் சச்சின் ஏமாற்றினார். அங்கு நடந்த டெஸ்ட் தொடர் மற்றும் ஒரு நாள் தொடரில் அவரால் சதத்தைப் போட முடியாத நிலையே ஏற்பட்டது.

ஆஸி.யிடம் டெஸ்ட் தொடர் தோல்வி
என்ன கொடுமை என்றால் டெஸ்ட் தொடரை இந்தியா 4-0 என்ற கணக்கிலும், முத்தரப்பு ஒரு நாள் தொடரில் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறாமலும் சொதப்பியது. இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவும் இலங்கையும் மோதின. அடுத்து வந்த தொடர்தான் ஆசியா கோப்பை. லட்டு போல கிடைத்த இந்த தொடரை சச்சின் பயன்படுத்திக் கொண்டு ஒரு வழியாக சதம் போட்டார்.

ஆசியா கோப்பைத் தொடரிலும் தடுமாற்றம்
இந்தத் தொடரிலும் கூட இந்தியா தடுமாற்றமாகவே இருந்தது. தொடரில் தொடர்ந்து இருக்க வேண்டுமானால் வங்கதேசத்தை வீழ்த்தியாக வேண்டிய நிலையில் இந்தியா இருந்தது. முதலில் ஆடிய இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 289 ரன்களைக் குவித்தது. சச்சினிடம் வழக்கமான ஸ்டைல் இல்லாவிட்டாலும் கூட தட்டுத் தடுமாறி விளையாடி சதம் போட்டார். 114 ரன்களை எடுத்த சச்சின் அதற்காக சாப்பிட்ட பந்துகள் 147 ஆகும். இதுதான் சச்சின் மிக மிக நிதானமாக போட்ட சதமாகும்.

சச்சின் சுயநலமாக ஆடினாரா?
ஆனால் சச்சின் சதம் போட்டு தனக்கான பெர்சனல் ரெக்கார்டை நேர்த்தி செய்து கொண்டாலும் கூட இந்தப் போட்டியில் இந்தியா தோல்வியைத் தழுவி தொடரை விட்டும் நீக்கப்பட்டது. இந்தப் போட்டியில் வங்கதேசம் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்து அதிர வைத்தது. இந்தத் தோல்விக்காக சச்சின் குற்றம் சாட்டப்பட்டார். அவர் சுயநலமாக விளையாடினார். அணிக்காக ஆடவில்லை. தனது சதத்திற்காகவே விளையாடினார் என்று பலரும் விமர்சித்தனர்.


Click it and Unblock the Notifications