One World vs One Family - இதயம் நொறுங்கிப் போச்சு.. சச்சினுக்கு முரளிதரன் வீசிய முதல் பந்து
மும்பை : ஒன் வேர்ல்டு - ஒன் ஃபேமிலி (One World vs One Family) எனும் கண்காட்சி கிரிக்கெட் போட்டியில் நீண்ட காலத்துக்கு பின் சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங், முத்தையா முரளிதரன், சமிந்தா வாஸ் போன்ற ஜாம்பவான்கள் இணைந்து ஆடினர்.
இந்தப் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் பேட்டிங்கை காண அவரது ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர். அவரது தலைமையில் ஒன் வேர்ல்டு அணியும், யுவராஜ் சிங் தலைமையில் ஒன் ஃபேமிலி அணியும் ஆடியது. முதலில் யுவராஜ் சிங்கின் அணி பேட்டிங் செய்தது. அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் குவித்தது.

அடுத்து சச்சின் அணி பேட்டிங் செய்தது. துவக்கம் அளித்து ஆடிய சச்சின் டெண்டுல்கர் தற்போதைய இளம் டி20 பேட்ஸ்மேன்களுக்கு ஈடு கொடுத்து அதிரடி ஆட்டம் ஆடினார். அதிவேகமாக சிங்கிள் ரன்களும் ஓடி அசத்தினார். சமிந்தா வாஸ், வெங்கடேஷ் பிரசாத், மக்கயா நிடினி ஆகியோரது ஓவர்களில் ரன் வேட்டையாடிய சச்சின் 3 ஃபோர், 1 சிக்ஸ் அடித்து தெறிக்க விட்டார்.
அடுத்து பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே முத்தையா முரளிதரன் பந்து வீச வந்தார். சம காலத்தில் சுழற் பந்துவீச்சில் முத்தையா முரளிதரனும், பேட்டிங்கில் சச்சினும் கோலோச்சிய நிலையில் அவர்களின் மோதலை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். முரளிதரன் வீசிய முதல் பந்தை, சச்சின் சில அடி தூரம் இறங்கி வந்து அடித்தார்.
சிக்ஸர் செல்லும் என எதிர்பார்த்த நிலையில் முகமது கைஃப் பந்தை கேட்ச் பிடித்தார். தங்கள் ஆதர்ச நாயகனின் பேட்டிங்கை காண வந்திருந்த ரசிகர்கள் இதயம் நொறுங்கிப் போனார்கள். அதிலும் முரளிதரன் பந்துவீச்சில் நின்று அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தது ஏமாற்றத்தை அளித்தது.
ஆனாலும், 16 பந்துகளில் 27 ரன்கள் குவித்து டி20 போட்டிக்கான சிறந்த பேட்டிங்கை ஆடி இருந்தார் ஜாம்பவான் சச்சின். அவரது ஸ்ட்ரைக் ரேட் 168 ஆக இருந்ததும் குறிப்பிடத்தக்கது. பின்னர் இர்பான் பதான் கடைசி ஓவரில் சிக்ஸ் அடித்து ஒன் வேர்ல்டு அணியை 19.5 ஓவரில் வெற்றி பெற வைத்தார். முத்தையா முரளிதரன் சச்சின் விக்கெட்டை மட்டுமே வீழ்த்தி இருந்தார்.


Click it and Unblock the Notifications