கொழும்பு: ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் முகமது சிராஜ் 7 ஓவர்களை முடித்த பின்னர், அவரை பந்துவீச்சில் இருந்து வெளியேற்றுமாறு அறிவுறுத்தப்பட்டதாக கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கை அணியை வெறும் 50 ரன்களுக்கு ஆல் அவுட் செய்து இந்திய அணி அசாத்தியத்தை நிகழ்த்தியுள்ளது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணியை ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி முடித்துக் கட்டினார் முகமது சிராஜ். இறுதியாக இலங்கை அணி 15.2 ஓவர்களில் வெறும் 50 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது.

இதன்பின் பேட்டிங் செய்த இந்திய அணி வெறும் 6.1 ஓவர்களில் இலக்கை சேஸ் செய்து வெற்றிபெற்றது. இதன் மூலமாக 8வது முறையாக ஆசியக் கோப்பை சாம்பியன் பட்டத்தை இந்திய அணி வென்றுள்ளது. இந்தப் போட்டியின் போது முகமது சிராஜ் தொடர்ச்சியாக 7 ஓவர்களை வீசியது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் முகமது சிராஜ் பந்துவீச்சு பற்றி கேப்டன் ரோகித் சர்மா பேசுகையில், ஸ்லிப் திசையில் இருந்து சிராஜ் பந்துவீசியதை பார்க்கவே அற்புதமாக இருந்தது. 3 வேகப்பந்துவீச்சாளர்களும் சிறப்பாக பந்துவீசினார்கள். ஆனால் சிராஜால் பந்தை அதிகமாக டர்ன் செய்ய முடிந்தது. இன் ஸ்விங்கர், அவுட் ஸ்விங்கர் என்று மிரட்டிவிட்டார். எல்லோரும் எல்லா நாட்களிலும் ஹீரோவாகிட முடியாது. ஒவ்வொரு நாளிலும் புதிய ஹீரோக்கள் முன் நிற்பார்கள். இன்றைய நாள் சிராஜிற்கானது.
முதல் ஸ்பெல்லில் மட்டும் 7 ஓவர்களை வீசினார் சிராஜ். நானும் சிராஜ் அதிக ஓவர்களை வீச வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் எங்களின் ட்ரெய்னரிடம் இருந்து வேகமாக செய்தி ஒன்று சொல்லப்பட்டது. சிராஜை நிறுத்துமாறு அறிவுறுத்தினார்கள். ஆனால் சிராஜ் பந்துவீசுவதற்கு ஆர்வமாக இருந்தார், ஒவ்வொரு பந்துவீச்சாளர்கள் மற்றும் பேட்ஸ்மேனுக்கும் அதுதான் விருப்பமானது. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கெட்டியாக பிடித்து கொள்ள வேண்டும் என்று தான் நினைப்போம்.
ஆனால் அதுபோன்ற சூழல்களில் தான் என் பணி இருக்கிறது. ஒவ்வொரு வீரரையும் அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டும். அதேபோல் இலங்கை அணிக்கு எதிராக திருவனந்தபுரத்தில் நடைபெற்ற போட்டியிலும் சிராஜ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அந்தப் போட்டியில் கூட சிராஜ் தொடர்ச்சியாக 8 முதல் 9 ஓவர்களை வரை வீசினார் என்று தெரிவித்தார்.