Padma Awards 2026: டென்னிஸ் ஜாம்பவான் விஜய் அமிர்தராஜுக்கு பத்ம பூஷண்.. ரோஹித், ஹர்மனுக்கு பத்ம ஸ்ரீ
டெல்லி: இந்திய நாட்டின் 77வது குடியரசு தினத்தை முன்னிட்டு, மத்திய அரசு 2026 ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகளை அறிவித்துள்ளது. கலை, இலக்கியம், சமூக சேவை மற்றும் விளையாட்டு எனப் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு இந்த உயரிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் விளையாட்டுத் துறையில் இந்தியாவிற்குப் பெருமை சேர்த்த பலரும் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் முன்னாள் டென்னிஸ் நட்சத்திரம் விஜய் அமிர்தராஜுக்கு நாட்டின் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு விளையாட்டுத் துறையில் பத்ம பூஷண் விருது பெறும் ஒரே நபர் இவராவார். இவர் சென்னையில் பிறந்தவர். அமெரிக்காவில் வசித்து வந்தாலும் இந்தியாவுக்காக டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்றவர்.

விம்பிள்டன் மற்றும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர்களில் இரண்டு முறை காலிறுதி வரை முன்னேறியுள்ள இவர், இந்திய டென்னிஸ் வரலாற்றில் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்தவர். 1974 ஆம் ஆண்டு அர்ஜுனா விருதும், 1983 ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருதும் பெற்ற இவர், தற்போது பத்ம பூஷண் விருது மூலம் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
ரோஹித் சர்மா மற்றும் ஹர்மன்பிரீத் கவுர்
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா மற்றும் மகளிர் அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ஆகியோருக்குப் பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும், ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் முக்கியத் தூணாக ரோஹித் சர்மா விளங்கி வருகிறார். கடந்த ஆண்டில் மட்டும் ஒருநாள் போட்டிகளில் 650 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். அவரது சிறப்பான பங்களிப்பிற்காக இந்த விருது வழங்கப்படுகிறது.
அதேபோல், இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருக்கும் பத்ம ஸ்ரீ விருது வழங்கப்படுகிறது. 2025 ஆம் ஆண்டு இந்திய மண்ணில் நடைபெற்ற உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணியை வழிநடத்தி, கோப்பையை வென்று வரலாற்றுச் சாதனை படைத்தவர் ஹர்மன்பிரீத் கவுர்.
கௌரவிக்கப்பட்ட மற்ற வீரர்கள்
இவர்களைத் தவிர, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரவீன் குமார் மற்றும் இந்திய மகளிர் ஹாக்கி அணியின் தடுப்புச் சுவராக விளங்கும் கோல் கீப்பர் சவிதா புனியா ஆகியோரும் பத்ம ஸ்ரீ விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், மகளிர் ஹாக்கி அணியின் வளர்ச்சிக்கு வித்திட்ட பயிற்சியாளர் பல்தேவ் சிங், பக்வான்தாஸ் ரைக்வார் மற்றும் கே.பழனிவேல் ஆகியோரும் விளையாட்டுத் துறையில் பத்ம ஸ்ரீ விருது பெறுகின்றனர். மல்யுத்த பயிற்சியாளர் விளாடிமிர் மெஸ்ட்விஸ்விலிக்கு மறைவுக்குப் பிந்தைய விருதாகப் பத்ம ஸ்ரீ அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்ம விருதுகள் பட்டியல் - விளையாட்டு
2026 ஆம் ஆண்டிற்கான பட்டியலில் மொத்தம் 131 பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 5 பத்ம விபூஷண், 13 பத்ம பூஷண் மற்றும் 113 பத்ம ஸ்ரீ விருதுகள் அடங்கும்.
விளையாட்டுத் துறையில் விருது பெற்றவர்கள் பட்டியல்:
விஜய் அமிர்தராஜ் - பத்ம பூஷண் (டென்னிஸ்)
ரோஹித் சர்மா - பத்ம ஸ்ரீ (கிரிக்கெட்)
ஹர்மன்பிரீத் கவுர் - பத்ம ஸ்ரீ (கிரிக்கெட்)
பிரவீன் குமார் - பத்ம ஸ்ரீ (கிரிக்கெட்)
சவிதா புனியா - பத்ம ஸ்ரீ (ஹாக்கி)
பல்தேவ் சிங் - பத்ம ஸ்ரீ
பக்வான்தாஸ் ரைக்வார் - பத்ம ஸ்ரீ
கே.பழனிவேல் - பத்ம ஸ்ரீ


Click it and Unblock the Notifications