இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்.. பாகிஸ்தான் 3-0 என தோற்றுவிடும் என முன்பே தெரியும்- வசீம் அக்ரம்
எட்ஜ்பாஸ்டன்: இங்கிலாந்துக்கு எதிரான நடப்பு டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி 3-0 என்ற கணக்கில் தோல்வியடையும் என்பது தனக்கு முன்பே தெரியும் என்று முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி கடுமையாக திணறியதுடன், 0-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி புதன்கிழமை தொடங்குகிறது.
"இங்கிலாந்துக்கு எதிரான தொடர் முன்பே நாம் 3-0 என்ற கணக்கில் தோற்கப் போகிறோம் என்று எனக்குத் தெரியும்" என்று வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், "நமது பேட்டிங் வரிசை தடுமாறுகிறது, பந்துவீச்சு சராசரிக்கும் குறைவாக உள்ளது, ஃபீல்டிங் அதைவிட மோசமாக இருக்கிறது. இதை புரிந்துகொள்வதற்கு ஒன்றும் பெரிய ராக்கெட் தொழில்நுட்பம் தேவையில்லை" என்றார்.

அக்ரம், 1987 மற்றும் 1996 ஆம் ஆண்டுகளில் இங்கிலாந்தில் பாகிஸ்தான் அணி தொடர்ந்து மூன்று டெஸ்ட் தொடர்களை வென்றபோது அந்த அணியின் முக்கிய அங்கமாக இருந்தார். இந்தத் தொடர்ச்சியான வெற்றிகளில் கடைசித் தொடரின் போது அவர் பாகிஸ்தான் அணியின் கேப்டனாகவும் இருந்தார்.
பாகிஸ்தான் அணியின் மோசமான செயல்பாடு பெரும் விமர்சனங்களை ஈர்த்துள்ள நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டிக்குப் பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மேற்கொண்ட அதிரடி மாற்றங்கள் கிரிக்கெட் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.
இரண்டாவது டெஸ்ட் போட்டி முடிவடைந்ததைத் தொடர்ந்து, அணியில் இருந்து ஏழு வீரர்களை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வீட்டிற்கு அனுப்பியதுடன், தலைமை பயிற்சியாளர் சர்பராஸ் அகமது மற்றும் அவரது பயிற்சி ஊழியர்களையும் நீக்கியது. தொடர்ந்து பேசிய அக்ரம், "பாகிஸ்தானில் 'ஒரு கையால் ஓசை எழுப்ப முடியாது' என்ற ஒரு பழமொழி உண்டு.
'பாகிஸ்தான் கிரிக்கெட்டை மேம்படுத்த உங்களால் ஏதாவது செய்ய முடியுமா?' என்று என்னிடம் அடிக்கடி கேட்கிறார்கள். ஆனால் இங்குள்ள பிரச்சினைகள் மிகவும் ஆழமானவை. தற்போதைய வீரர்கள்தான் நம்மிடம் இருக்கும் சிறந்த வீரர்கள், இவர்களைத் தவிர வேறு யாருமில்லை. அவர்களுக்குக் கீழ் முறையான கட்டமைப்புகள் எதுவும் சரியாக இல்லை. கடந்த சில ஆண்டுகளாக உள்நாட்டு முதல்தர கிரிக்கெட் கட்டமைப்பு மிகவும் சீர்குலைந்து காணப்படுகிறது. அங்கு எந்தவொரு நிலைத்தன்மையும் பொறுமையும் இல்லை" என்று அவர் கூறினார்.
"இது ரசிகர்களையும் பாதிக்கிறது. அணி தோற்பதை அவர்கள் பார்க்கும்போது, எல்லாவற்றையும் மாற்றியமைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். நாம் ஏற்கனவே பலமுறை அவ்வாறு செய்துவிட்டோம், இப்போது மாற்றுவதற்கு நம்மிடம் எதுவும் மிச்சமில்லை" என்று அக்ரம் வருத்தத்துடன் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications


