முல்தான்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 120 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரை 1 - 1 என சமன் செய்தது. பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது.
முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 127 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்று இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி 35 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் மண்ணில் முதல் டெஸ்ட் போட்டி வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்து இருக்கிறது.

கடைசியாக 1990 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பைசலாபாத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி பாகிஸ்தானை வீழ்த்தி இருந்தது. அதன் பின் 1997 மற்றும் 2006 ஆகிய ஆண்டுகளில் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு வெற்றியை கூட பெறவில்லை. 35 ஆண்டுகளுக்கு பின் தற்போது பாகிஸ்தான் மண்ணில் டெஸ்ட் வெற்றியை பதிவு செய்து இருக்கிறது வெஸ்ட் இண்டீஸ் .
சமீப காலமாக சுழற் பந்து வீச்சுக்கு சாதகமான பிட்ச்களை தயார் செய்து எதிரணிகளை வீழ்த்துவதை பாகிஸ்தான் ஒரு வியூகமாக கடைபிடித்து வருகிறது. பாகிஸ்தானின் இந்த வியூகத்தை வைத்தே அந்த அணியை வீழ்த்தி இருக்கிறது வெஸ்ட் இண்டீஸ் அணி.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் சுழற் பந்துவீச்சாளர் ஜோமல் வார்ரிகன் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதல் டெஸ்ட் போட்டியில் அவர் 10 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மற்றொரு வெஸ்ட் இண்டீஸ் சுழற் பந்துவீச்சாளர் குடகேஷ் மோட்டி 5 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 163 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் அணியின் சுழற் பந்துவீச்சாளர்கள் நோமன் அலி 6 விக்கெட்களும், சஜித் கான் 2 விக்கெட்களும், அப்ரார் அகமது 1 விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தனர். அடுத்து பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸ் ஆடியது.
அந்த அணி 154 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. முகமது ரிஸ்வான் அதிகபட்சமாக 49 ரன்கள் எடுத்து இருந்தார். சுழற் பந்துவீச்சாளர்களான ஜோமல் வார்ரிகன் 4 விக்கெட்களையும், குடகேஷ் மோட்டி மூன்று விக்கெட்களையும் வீழ்த்தி இருந்தனர். வேகப் பந்துவீச்சாளர் கீமார் ரோச் இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார்.
அடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்ஸில் ஓரளவு தாக்குப் பிடித்து ஆடி 244 ரன்கள் எடுத்தது. கேப்டன் பிராத்வெயிட் 52 ரன்கள் சேர்த்தார். டெவின் இம்லாச் 35, அமீர் ஜாங்கோ 30, கெவின் சின்கிளேர் 28 ரன்கள் சேர்த்தனர். இந்த இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணியின் சுழற் பந்துவீச்சாளர்களான சஜித் கான் நான்கு விக்கெட்களையும், நோமன் அலி 4 விக்கெட்களையும், அப்ரார் அகமது ஒரு விக்கெட்டையும், காசிப் அலி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தனர்.
அடுத்து பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்சில் 254 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடியது. அப்போது பாகிஸ்தான் அணி 133 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக பாபர் அசாம் 31 ரன்கள் எடுத்து இருந்தார். இரண்டாவது இன்னிங்ஸில் ஜோமல் வார்ரிகன் 5 விக்கெட்களும், கெவின் சின்கிளேர் 3 விக்கெட்களும், குடகேஷ் மோட்டி 2 விக்கெட்டுகளும் வீழ்த்தி இருந்தனர். இதை அடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி 120 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 1 - 1 என சமன் செய்தது.