"ஒரு பாகிஸ்தான் வீரருக்கு 24 லட்சம் கொடுத்தால்தான்".. நேபாளத்திடம் பணம் கேட்கும் பாக். போர்டு
காத்மாண்டு: நேபாள பிரீமியர் லீக் டி20 தொடரில் தங்களது நாட்டு வீரர்கள் விளையாட அனுமதி அளிக்க வேண்டும் என்றால், ஒவ்வொரு வீரருக்கும் தலா 25,000 அமெரிக்க டாலர் (சுமார் 23.80 லட்சம் இந்திய ரூபாய்) கட்டணம் தர வேண்டும் என்று மோஷின் நக்வி தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கறாராகக் கேட்டுள்ளதாகப் புதிய சர்ச்சை வெடித்துள்ளது. ஒவ்வொரு வீரருக்கும் இந்திய மதிப்பில் சுமார் 24 லட்சம் ரூபாய் வரை தடையில்லா சான்றிதழ் கட்டணமாகக் கேட்டு பாகிஸ்தான் போர்டு முட்டுக்கட்டை போடுவதாக நேபாள லீக் நிர்வாகிகள் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளனர்.
காத்மாண்டுவில் விரைவில் தொடங்கவுள்ள இந்தத் தொடரில் விளையாட பாகிஸ்தான் டி20 கேப்டன் சாஹிப்சாதா ஃபர்ஹான், அதிரடி பேட்டர் இப்திகார் அகமது, வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி, ஹைதர் அலி, உசாமா மிர், ஹுசைன் தலாத் மற்றும் இளம் வீரர் ஹுனைன் ஷா உள்ளிட்ட பல முக்கிய வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இதில் சில வீரர்கள் ஏற்கனவே நேபாளத்திற்குப் புறப்பட்டுச் சென்று தங்களது அணிகளுடன் இணைந்துவிட்டனர். ஆனால் மற்ற முன்னணி வீரர்கள் பாகிஸ்தான் வாரியத்தின் முறையான தடையில்லா சான்றிதழ் கிடைக்காததால் தங்களது விமானப் பயணத்தை நிறுத்தி வைத்துள்ளனர்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் மாற்றியமைக்கப்பட்ட ஒப்பந்த விதிகளின்படி, தேசிய அணிக்கு சர்வதேசப் போட்டிகள் இல்லாத காலகட்டத்தில் வீரர்கள் தங்களுக்கு விருப்பமான வெளிநாட்டு லீக் தொடர்களில் பங்கேற்க முழு உரிமை உண்டு. தற்போது நேபாள லீக்கில் ஒப்பந்தமாகியுள்ள வீரர்கள் யாரும் பாகிஸ்தானின் டெஸ்ட் அல்லது ஒருநாள் அணிகளில் விளையாடவில்லை. மேலும் பாகிஸ்தானுக்கு உடனடியாக எந்த டி20 சர்வதேசப் போட்டிகளும் இல்லை. எந்தவித போட்டி அட்டவணை முரண்பாடும் இல்லாத சூழலில், பாகிஸ்தான் வாரியம் இவ்வாறு பணம் கேட்டு வீரர்களின் வாய்ப்பைத் தடுப்பது நியாயமற்றது என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
போட்டி தொடங்குவதற்கு முன்பாகவே எழுந்துள்ள இந்த திடீர் பணப் பிரச்சினை நேபாள லீக் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ பதிலும் அளிக்கவில்லை. இந்த நிர்வாக முட்டுக்கட்டைக்கு உடனடியாக சுமுகத் தீர்வு காணப்படாவிட்டால், நேபாள லீக்கில் நட்சத்திர பாகிஸ்தான் வீரர்கள் விளையாடுவது முழுமையாக ரத்தாகும் அபாயம் நிலவுகிறது.


Click it and Unblock the Notifications

