"திறமையால் வரவில்லை, இடஒதுக்கீட்டில் கேப்டன் ஆனார் என்று..".. டெம்பா பவுமாவை ஒப்பிட்ட கவாஸ்கர்
மும்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் 179 ரன்கள் விளாசி, தென்னாப்பிரிக்க அணி இன்னிங்ஸ் வெற்றியைப் பெற்றுத் தந்த கேப்டன் டெம்பா பவுமாவை ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் பாராட்டித் தள்ளி வருகிறது. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் பவுமாவை மனம் திறந்து புகழ்ந்துள்ளார். மார்பைத் தட்டி விளம்பரம் தேடாத அமைதியான தலைவரான பவுமாவை, இந்திய முன்னாள் நட்சத்திர வீரர்களான அஜிங்க்யா ரஹானே மற்றும் குண்டப்பா விஸ்வநாத் ஆகியோருடன் கவாஸ்கர் ஒப்பிட்டு பேசி உள்ளார்.
இதுபற்றி மிட்-டே நாளிதழில் கவாஸ்கர் எழுதியுள்ள கட்டுரையில், "தென்னாப்பிரிக்க அணியின் கேப்டனாக டெம்பா பவுமா நியமிக்கப்பட்ட போது, அவர் திறமையால் வரவில்லை, இடஒதுக்கீடு அடிப்படையில் வந்தவர் என்று பலர் கண்ஜாடை காட்டி விமர்சித்தனர். ஆனால் தனது சிறப்பான ஆட்டத்தால் அந்த விமர்சகர்களின் முகத்தில் கரியைப் பூசியுள்ளார். தான் கேப்டனாகப் பொறுப்பேற்ற 14 டெஸ்ட் போட்டிகளில் 12 வெற்றிகளைப் பெற்று மகத்தான சாதனை படைத்துள்ளார். அஜிங்க்யா ரஹானே தலைமையிலும் இந்திய அணி எந்தவொரு டெஸ்ட் போட்டியிலும் தோற்றதில்லை. இவர்கள் இருவருமே வீண் தம்பட்டம் அடித்துக் கொள்பவர்கள் அல்ல. தங்களை பெரிய ஆளாகக் காட்டிக்கொள்ள இவர்களிடம் விளம்பரம் செய்யும் பிஆர் படையும் கிடையாது" என்று குறிப்பிட்டுள்ளார்.

குண்டப்பா விஸ்வநாத்தை நினைவுகூர்ந்த கவாஸ்கர், "களத்தில் ஒரு வீரர் கடுமையான மன உறுதியைக் காட்டுவதற்கு மற்றவர்களைத் திட்டவோ அல்லது ஆக்ரோஷமாக கோபத்தை வெளிப்படுத்தவோ தேவையில்லை என்பதை உலகிற்கு நிரூபித்துக் காட்டியவர் விஸ்வநாத். பவுமாவின் அமைதியான உடல்மொழியும் எனக்கு எங்கள் காலத்து நாயகன் விஸ்வநாத்தையே அச்சு அசல் நினைவூட்டுகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.
தென்னாப்பிரிக்க அணி டெஸ்ட் தொடரில் 0-1 என பின்தங்கிய நிலையில் 2-வது டெஸ்டில் ஆடியது. அதிலும் 110 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தென்னாப்பிரிக்கா தவித்த போது, பவுமா பொறுப்புடன் ஆடி 179 ரன்கள் குவித்தார். தென்னாப்பிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 31 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற அவரது ஆட்டமே அடித்தளமாக அமைந்தது.


Click it and Unblock the Notifications


