மும்பை : டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 10 ஆயிரம் ரன்களை விளாசிய வீரர் என்ற சாதனை பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம் படைத்துள்ளார்.
பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான பாபர் அசாம் மீண்டும் தனது பேட்டிங் ஃபார்மை மீட்டெடுத்துள்ளார். விராட் கோலியை போல் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் என்று அனைத்து வடிவங்களிலும் அசத்தலான ஆட்டத்தை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருபவர் பாபர் அசாம். விராட் கோலி, ஸ்டீஸ் ஸ்மித், கேன் வில்லியம்சன் ஆகியோருக்கு நிகரான வீரராக பாகிஸ்தான் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்.

டெக்னிக்கலாகவும், ஷாட் ரீதியிலாக மிகச்சிறந்த பேட்ஸ்மேனான பாபர் அசாம், டி20 கிரிக்கெட்டிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். சர்வதேச டி20 கிரிக்கெட் மட்டுமல்லாமல் லீக் போட்டிகளிலும் பாபர் அசாமின் ஆட்டம் மிரட்டலாக அமைந்துள்ளது. பிஎஸ்எல் , எல்பிஎல், சிபிஎல், பிபிஎல் என்று 4 வகையான லீக் போட்டிகளிலும் பாபர் அசாம் விளையாடி வருகிறார்.
இதன் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் பாபர் அசாம் குறைந்த இன்னிங்ஸ்களில் 10 ஆயிரம் ரன்களை விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதுவரை 271 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள பாபர் அசாம் 84 அரைசதம், 10 சதங்கள் உட்பட 10,066 ரன்களை விளாசியிருக்கிறார். இவருக்கு முன்பாக வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெய்ல் 285 இன்னிங்ஸ்களில் 10 ஆயிரம் ரன்களை கடந்ததே சாதனையாக இருந்தது.
இந்த பட்டியலில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 3வது இடத்தில் இருக்கிறார். விராட் கோலி 299 இன்னிங்ஸ்களில் 10 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார். இந்த எண்ணிக்கை சர்வதேச கிரிக்கெட் மற்றும் லீக் போட்டிகள் இரண்டும் இணைக்கப்பட்டு கணக்கிடப்பட்டுள்ளது. அதேபோல் ஆஸ்திரேலியா ஜாம்பவான் டேவிட் வார்னர் 303 இன்னிங்ஸ்களிலும், ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் டேவிட் ஃபின்ச் 327 இன்னிங்ஸ்களிலும், ஜாஸ் பட்லர் 350 இன்னிங்ஸ்களிலும் 10 ஆயிரம் ரன்களை கடந்துள்ளனர்.
ஜாம்பவான் வீரர்களை கடந்து பாபர் அசாம் அதிவேகமாக 10 ஆயிரம் ரன்களை குவித்துள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அடுத்த சூப்பர் ஸ்டார் வீரராக பாபர் அசாம் சைலண்ட் மோடில் உருவாகிவிட்டதாக அந்நாட்டு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதேபோல் பலரும் பாபர் அசாமிற்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.