பாகிஸ்தான் முத்தரப்பு தொடர் பைனல் எப்போது? எங்கு காணலாம்? பாபர் அசாம்-ஐ புகழ்ந்த பயிற்சியாளர்
பாபர் அசாம் மற்றும் ஃபகர் ஜமான் ஆகிய இருவரையும் பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றின் மிகச்சிறந்த வீரர்களில் இருவர் என்று அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் மைக் ஹெஸன் பாராட்டியுள்ளார். லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் நடைபெறும் முத்தரப்பு தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், முக்கிய போட்டியில் அவர்கள் தங்களின் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நடப்பு தொடரில் பாகிஸ்தான் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்கச் சிரமப்பட்டு வருகின்றனர். பாபர் அசாம் கடந்த போட்டிகளில் 45, 34, 10 மற்றும் 29 ரன்களையும், ஃபகர் ஜமான் 16, 0, 10 மற்றும் 5 ரன்களையும் மட்டுமே எடுத்துள்ளனர். ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தான் தரப்பில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன்களின் பட்டியலில் பாபர் அசாம் 9-வது இடத்திலும், ஃபகர் ஜமான் 16-வது இடத்திலும் உள்ளனர்.

இதுகுறித்து பேசிய மைக் ஹெஸன், "பாகிஸ்தான் வரலாற்றின் சிறந்த பேட்ஸ்மேன்களில் இருவரைப் பற்றி நாம் பேசுகிறோம். பெரிய போட்டிகளில் இதுபோன்ற பெரிய வீரர்கள் பொறுப்புடன் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன். எங்கள் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தங்களது முழு திறனை வெளிப்படுத்தாத நிலையிலும் எங்களால் வெற்றிகளை பெற முடிந்தது ஒரு நல்ல அறிகுறியாகும்.
முக்கிய வீரர்கள் போட்டியை வென்று கொடுக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்தக் காத்திருக்கிறார்கள்; அதற்கு இறுதிப் போட்டியை விட சிறந்த இடம் எதுவும் இருக்க முடியாது" என்று கூறினார்.இந்த தொடரில் பாகிஸ்தான் அணி இலங்கையை 37 ரன்கள் வித்தியாசத்திலும், இங்கிலாந்தை 87 ரன்கள் வித்தியாசத்திலும் தோற்கடித்தது.
தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான மற்றொரு போட்டியில் ஷதாப் கானின் சதத்தின் உதவியால் 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. லீக் சுற்றின் கடைசிப் போட்டியில் இலங்கையிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்த போதிலும், இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் என ஹெஸன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இறுதிப் போட்டி சனிக்கிழமை மதியம் 1.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்தப் போட்டி இந்தியாவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படவில்லை. ஆன்லைனில் Veto app மூலம் இலவசமாக காணலாம்.


Click it and Unblock the Notifications


