எனது 12 பந்து 50-ஐ நெருங்க முடியலயா? அபிஷேக்கை கிண்டல் செய்த யுவராஜ்.. வைபவ், சாம்சனுக்கு பாராட்டு
மும்பை: நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா 15 பந்துகளில் அரைசதமும், 35 பந்துகளில் சதமும் விளாசி அசத்தினார். இந்த அதிரடி ஆட்டத்திற்குப் பிறகும், இந்திய முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தனது மாணவரான அபிஷேக் சர்மாவை சமூக வலைதளத்தில் ஜாலியாகக் கிண்டல் செய்துள்ளார்.
2007 டி20 உலகக்கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக யுவராஜ் சிங் 12 பந்துகளில்வேகமான அரைசத சாதனை இன்னமும் முறியடிக்கப்படாமல் முதலிடத்தில் உள்ளது. போட்டிக்குப் பிறகு எக்ஸ் தளத்தில் பதிவிட்ட யுவராஜ் சிங், "உன்னால் இன்னும் 12 பந்துகளில் 50 ரன்கள் அடிக்க முடியவில்லை, அல்லவா? பார்க்க இரு இடது கை பேட்டர்களும் தங்கள் வீட்டுப் பின்புறத்தில் பேட்டிங் செய்வது போல் உள்ளது" எனக் குறிப்பிட்டுத் தனது 12 பந்து அரைசத சாதனையை நினைவூட்டினார்.

இதற்குப் போட்டி நிறைவு விழாவில் பதிலளித்த அபிஷேக் சர்மா, "அந்தக் காலத்தில் அவர் எப்படி அப்படி விளையாடினார் என்று எனக்குத் தெரியவில்லை. அது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. எந்தவொரு பேட்டர் களமிறங்கினாலும் அவ்வளவு வேகமாக விளையாடுவது எளிதல்ல" என்று யுவராஜின் சாதனையைப் போற்றினார்.
அபிஷேக்கின் பதிலைத் தொடர்ந்து மீண்டும் பதிவிட்ட யுவராஜ், "என்னால் 30 அல்லது 34 பந்துகளில் 100 ரன்கள் அடிக்க முடியாது. சிறப்பான ஆட்டம் அபிஷேக்!" என்று பாராட்டினார். மேலும், 18 பந்துகளில் 45 ரன்கள் விளாசிய 15 வயது வீரன் வைபவ் சூரியவன்ஷி, 3ஆவது இடத்தில் களமிறங்கிய சஞ்சு சாம்சன் மற்றும் எதிரணியை 200 ரன்களுக்குள் கட்டுப்படுத்திய இந்திய பந்துவீச்சாளர்களுக்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார்.
இப்போட்டியில் இந்திய அணி 5 ஓவர்களிலேயே 100 ரன்களைக் கடந்து அதிவேக சாதனைகளை படைத்ததுடன், பவர் பிளேவில் 118 ரன்கள் குவித்து அசத்தியது. இதன் மூலம் நியூசிலாந்து மண்ணில் தொடர்ச்சியாக மூன்றாவது டி20 தொடரைக் கைப்பற்றி இந்திய அணி சாதனை படைத்துள்ளது.


Click it and Unblock the Notifications


