யுவராஜ் 12 பந்து 50 ரன்கள் சாதனையை என்னால் தொட முடியாது.. பயிற்சியாளர்களே வெற்றிக்கு காரணம்-அபிஷேக்
வெலிங்டன்: நியூசிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணியில் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 35 பந்துகளில் அதிரடியாக சதம் விளாசி அசத்தினார். இதன் மூலம் 199 ரன்கள் என்ற இலக்கை 13.2 ஓவரில் எல்லாம் வெற்றி இலக்கை எட்டி தொடரை வென்றது. இதனால் அபிஷேக் சர்மாவுக்கு ஆட்டநாயகன் விருது கிடைத்தது.
இந்த வெற்றி குறித்து பேசிய அபிஷேக் சர்மா, பவர்ஃபிளே ஓவர்களில் வைபவ் உடன் இணைந்து எந்தவித அழுத்தமும் இன்றி இயல்பாக விளையாடுவதே தங்களது எளிய திட்டமாக இருந்தது என்று தெரிவித்துள்ளார்.

பந்துவீச்சின் போது ஆடுகளத்தில் கூடுதல் பவுன்ஸ் இருப்பதை கவனித்ததாகக் குறிப்பிட்ட அவர், மைதானத்தின் எல்லை அளவுகள் மற்றும் பந்தின் வேகத்தைப் பயன்படுத்தி பவர்ஃபிளே ஓவர்களில் ரன்களைக் குவிக்க திட்டமிட்டதாகக் கூறினார். முதல் ஓவரிலேயே வைபவ் அளித்த சிறப்பான தொடக்கம் அணிக்குத் தேவையான வேகத்தை வழங்கியதாகவும், அதையே ஆட்டம் முழுவதும் தொடர விரும்பியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மைதானத்தில் சிறப்பாக செயல்படுவதற்குப் பின்னால் முறையான தயாரிப்புகள் உள்ளதாகத் தெரிவித்த அவர், side arm முறையில் தீவிர பயிற்சி அளித்த பயிற்சியாளர்களுக்கு சிறப்பு நன்றியைத் தெரிவித்தார். ஆடுகளத்தின் தன்மை, மைதானத்தின் அளவுகள் மற்றும் பந்துவீச்சாளர்களின் உத்திகளை மனதில் கொண்டு அதற்கேற்ப ஷாட்களை தேர்வதே தனது பாணி என்றும் கூறினார்.
முந்தைய நாள் பயிற்சியை சரியாக பயன்படுத்தியதன் மூலம் தான் மனதால் காட்சிப்படுத்திய ஆட்டத்தை களத்தில் வெளிப்படுத்த முடிந்ததாக அவர் விவரித்தார்.12 பந்துகளில் அரைசதம் அடிப்பது தொடர்பாக யுவராஜ் சிங் நகைச்சுவையாக அனுப்பிய செய்தி குறித்துப் பேசிய அவர், "அக்காலத்தில் யுவராஜ் எந்த மாதிரி விளையாடினார் என்றே தெரியவில்லை. 12 பந்துகளில் 50 ரன்கள் எடுப்பது என்பது அவ்வளவு எளிதானதல்ல.
அது எப்போதாவது ஒருமுறை மட்டுமே நிகழக்கூடியது. ஒரு பேட்டராக தனிப்பட்ட மைல்கற்களைத் தாண்டி அணியை வெற்றி பெற வைப்பதே முதன்மை இலக்கு" என்று கூறினார். மேலும், இதே வெற்றிகரமான அணுகுமுறையைத் தொடர் முழுவதும் தொடர விரும்புவதாகவும் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications


