யார் இந்த பையன்? ராகுலிடம் கேள்வி கேட்ட பில்லிங்ஸ்.. இளம் வீரர்களில் அவர்தான் பெஸ்ட் என பாராட்டு!
மும்பை : ஷ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக டெல்லி கேபிடல்ஸ் அணியின் புதிய கேப்டனாக ரிஷப் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த இங்கிலாந்து, ஆஸ்திரேலிய தொடர்களில் பந்த் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ள நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆளுமையை அவர் வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தான் இதுவரை பார்த்த இளம் வீரர்களில் ரிஷப் பந்த் தான் மிகவும் சிறப்பானவர் என்று இங்கிலாந்து வீரர் சாம் பில்லிங்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப்
இந்த ஐபிஎல் சீசனில் தனது முதல் போட்டியை சிஎஸ்கே அணியுடன் வரும் 10ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் விளையாடவுள்ளது டெல்லி கேபிடல்ஸ். அந்த அணியின் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள ரிஷப் பந்த்திற்கு இது ஒரு சவாலான விஷயம்தான்.

நிரூபிக்க வேண்டிய கட்டாயம்
கடந்த சில மாதங்களில் தன்னை ஒரு பேட்ஸ்மேனாக விக்கெட் கீப்பராக நிரூபித்து அனைவரையும் ஆச்சர்யத்திற்குள்ளாக்கியுள்ள ரிஷப் பந்த், தற்போது கேப்டனாக தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். தற்போதைய சூழலில் அவருக்கு எல்லாமே ஏறுமுகமாக உள்ள நிலையில், இதையும் சிறப்பாக செய்து முடிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

ரிஷப் சிறந்தவர்
இந்நிலையில் தான் பார்த்த இளம் வீரர்களிலேயே ரிஷப் பந்த் தான் மிகச் சிறந்த வீரர் என்று டெல்லி கேபிடல்ஸ் அணி வீரர் சாம் பில்லிங்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். கடந்த 2016 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் டெல்லி கேபிடல்ஸ் அணியில் பங்கேற்று விளையாடிய பில்லிங்ஸ் தற்போது மீண்டும் அணியில் இணைந்துள்ளார்.

பில்லிங்ஸ் கேள்வி
இந்நிலையில் முதல் முறை பந்த்தை பார்த்தபோது அப்போதைய அணியின் வழிகாட்டி ராகுல் டிராவிட்டிடம் யார் இந்த பையன் என்று கேட்டதாகவும் ஆனால் தற்போது பந்த்தை அனைவருக்கும் தெரிந்துள்ளதாகவும் பில்லிங்ஸ் மேலும் கூறியுள்ளார். அவர் இந்தியா மற்றும் டெல்லி அணிகளுக்காக தொடர்ந்து சிறப்பாக ஆடிவருவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் தொடர்ந்து வலிமையடைந்து வருவதாகவும் பில்லிங்ஸ் மேலும் பாராட்டு தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications