ஷிகர் தவான் செய்த பெரும் தவறு.. கடைசி ஓவரில் சென்ற 23 ரன்கள்! முன்னாள் வீரர்கள் விளாசல்
தரம்சாலா: பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் செய்த தவறால், கடைசி ஓவரில் டெல்லி அணி வீரர்கள் 23 ரன்களை விளாசியது, பஞ்சாப் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடரின் 64வது போட்டியில் டெல்லி அணியை எதிர்த்து பஞ்சாப் அணி விளையாடியது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் ஷிகர் தவான் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 213 ரன்கள் குவித்துள்ளது. அதில் அதிகபட்சமாக ரூஸோவ் 37 பந்துகளில் 82 ரன்களும், ப்ரித்வி ஷா 38 பந்துகளில் 54 ரன்களும் எடுத்தனர்.

இதில் பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் செய்த தவறு காரணமாக டெல்லி அணி இமாயல இலக்கை நிர்ணயித்தது. 19 ஓவர்களில் 190 ரன்கள் குவித்திருந்த நிலையில், கடைசி ஓவரை வீச ஸ்பின்னரான ஹர்ப்ரீத் ப்ராரை அழைத்தார் ஷிகர் தவான். அந்த ஓவரின் முதல் பந்திலேயே சிக்சரை விளாசிய ரூஸோவ், அடுத்த பந்தை பவுண்டரிக்கு விளாசினார். பின்னர் பிரஷர் காரணமாக ஒய்டு வீசப்பட்ட நிலையில், அடுத்த பந்து மீண்டும் சிக்சருக்கு சென்றது.
இதன் பின்னர் மீண்டும் ஒரு ஒய்டு மற்றும் சிக்சர் விளாசப்பட்டது. இதன் மூலம் ஒட்டுமொத்தமாக 23 ரன்கள் அந்த ஓவரி சேர்க்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் ரபாடா, அர்ஷ்தீப் சிங் உள்ளிட்டோருக்கு ஓவர்கள் மீதமிருந்த நிலையில், எதற்காக ஸ்பின்னரை பந்துவீச ஷிகர் தவான் அழைத்தார் என்பதே தெரியவில்லை. ஷிகர் தவானின் இந்த முடிவு ரசிகர்களிடையே விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.



Click it and Unblock the Notifications