அகமதாபாத் : குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி வெற்றிபெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்த இளம் வீரர் அஷுதோஷ் சர்மா குறித்து பார்க்கலாம்.
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி வெற்றிபெற முதன்மை காரணமாக ஷஷாங்க் சிங் அமைந்தார். அதேபோல் இம்பேக்ட் பிளேயராக வந்த 25 வயதாகும் அஷுதோஷ் சர்மா 17 பந்துகளில் ஒரு சிக்ஸ், 3 பவுண்டரி விளாசி 31 ரன்கள் எடுத்து அசத்தினார். கடைசி 3 ஓவர்களில் பஞ்சாப் அணிக்கு தேவையான ரன்களை அஷுதோஷ் சர்மா விரைவாக சேர்த்தார்.

திடீரென இம்பேக்ட் பிளேயராக களமிறங்கி பஞ்சாப் அணிக்கு வெற்றியை தேடி கொடுத்த அஷுதோஷ் சர்மா உள்ளூர் கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். இருப்பினும் ஐபிஎல் ஏலத்தின் போது அடிப்படை விலையான ரூ.20 லட்சத்திற்கே வாங்கப்பட்டுள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த அஷுதோஷ் சர்மா, 8 வயதிலேயே கிரிக்கெட் பயிற்சியை தொடங்கியவர்.
இந்திய முன்னாள் வீரர் அமய் குரஷியாவிடம் பயிற்சி பெற்ற இவர், மத்திய பிரதேச மாநில அணியில் 2018ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். இருப்பினும் அந்த சீசனில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. தொடர்ந்து 2019ஆம் ஆண்டு மத்திய பிரதேச அணிக்காக சையத் முஷ்டாக் அலி தொடரில் 3 அரைசதங்கள் அடித்துள்ளார். ஆனாலும் அடுத்த சீசனுக்கு அவர் தேர்வு செய்யப்படவில்லை. இதனால் ரயில்வே அணியில் இணைய முடிவு செய்துள்ளார்.
இதனிடையே மத்திய பிரதேச யு19 அணிக்காக தேர்வு செய்யப்படாத போது கிரிக்கெட்டில் இருந்தே போய்விடலாம் என்று யோசித்ததாக கூறியுள்ளார். சிறப்பாக விளையாடிய போதும், 2 ஆண்டுகளாக உள்ளூர் கிரிக்கெட்டில் தேர்வு செய்யப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளார் அஷுதோஷ் சர்மா. இதன்பின் அருணாச்சல பிரதேச அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கிய அஷுதோஷ் சர்மா, 11 பந்துகளில் அரைசதம் விளாசி சாதனை படைத்துள்ளார்.
12 பந்துகளில் 8 சிக்ஸ், ஒரு பவுண்டரி உட்பட 53 ரன்கள் விளாசி, இந்திய வீரர் யுவராஜ் சிங் சாதனையை முறியடித்துள்ளார். இந்த வீடியோ ட்ரெண்டான நிலையில், பஞ்சாப் அணி தரப்பில் ஐபிஎல் ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளார். பவர் ஹிட்டரான அஷுதோஷ் சர்மாவை பஞ்சாப் அணி நிர்வாகம் சிவம் துபேவை போல் பயன்படுத்த முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.