ரசிகர்களோட உற்சாகத்துக்கிடையில விளையாடறத தவறவிடுவோம்... ஷிகர் தவான்
மும்பை : அதிகமான ரசிகர்களின் கூட்டத்திற்கு முன்பு, அவர்களின் உற்சாகத்திற்கு முன்பு ஆடுவதை வீரர்கள் தற்போதைய சூழலில் தவற விடுவார்கள் என்று இந்திய துவக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் குறிப்பிட்டுள்ளார்.
Recommended Video
இன்ஸ்டாகிராம் நேரலையில் முன்னாள் இலங்கை கேப்டன் ஏஞ்சலோ மாத்யூசுடன் கலந்துரையாடிய ஷிகர் தவான் இதனை தெரிவித்துள்ளார்.
ஆனால் தற்போதைய சூழலில் விளையாட வேண்டிய தாகத்துடன் உள்ள வீரர்களுக்கு கிரிக்கெட் நடத்தப்படுவது முக்கியமானது என்றும் அவர் கூறியுள்ளார்.

இன்ஸ்டா நேரலையில் கலந்துரையாடல்
இந்திய கிரிக்கெட்டின் துவக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், கடந்த ஜனவரியில் ஒருநாள் போட்டியில் விளையாடினார். அப்போது அவருக்கு காயம் ஏற்பட்டதையடுத்து, அவர் தொடர்ந்து விளையாடாமல் ஓய்வெடுத்து வந்தார். இதனால் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் அவர் பங்கேற்கவில்லை. அவரது காயங்கள் ஆறிய நிலையில், தற்போது ஊடரங்கு காரணமாக அவர் வீட்டில் முடங்கியுள்ளார்.

வீரர்கள் தவறவிடுவார்கள்
இந்நிலையில் இன்ஸ்டாகிராம் நேரலையில் முன்னாள் இலங்கை கேப்டன் ஏஞ்சலோ மாத்யூசுடன் மேற்கொண்ட கலந்துரையாடலில், காலி மைதானங்களில் கிரிக்கெட் ஆடுவதால், ரசிகர்களின் உற்சாகத்தை வீரர்கள் தவற விடுவார்கள் என்று ஷிகர் தவான் குறிப்பிட்டுள்ளார். ரசிகர்கள் கிரிக்கெட் போட்டிகளுக்கு கவர்ச்சி மற்றும் பிரகாசத்தை அளிப்பவர்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும்
ஆனால் கிரிக்கெட் வீரர்கள் இரண்டு மாதங்களாக வீட்டில் முடங்கியுள்ள நிலையில், போட்டிகள் எந்தவகையிலாவது நடத்தப்பட வேண்டும் என்று ஷிகர் தவான் கூறியுள்ளார். தற்போதைய சூழலில் போட்டிகளை ஆட வேண்டும் என்ற தாகத்துடன் வீரர்கள் உள்ளதாக குறிப்பிட்டுள்ள தவான், அதனால் வீரர்கள் போட்டிகளில் பங்கேற்கும்போது, அவர்களது ஆட்டம் ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை, உற்சாகத்தை அளிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

பாசிட்டிவிடி கிடைக்கும்
தொடர்ந்து பேசிய ஷிகர் தவான், ஐபிஎல் போட்டிகள் இந்த ஆண்டு கண்டிப்பாக நடக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றால் அது அதிகமான அளவில் பாசிட்டிவிடியை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் 8 வருடங்கள் விளையாடியுள்ள ஷிகர் தவான், தற்போது இந்த சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாட உள்ளார்.


Click it and Unblock the Notifications