உலக கோப்பைக்கான அந்த அணியில் மீண்டும் இணையும் அதிரடி வீரர்… ஏக குஷியில் ரசிகர்கள்
போர்ட் ஆப் ஸ்பெயின்: மேற்கிந்திய தீவுகள் அணியில் அதிரடி வீரர் பொல்லார்டு மீண்டும் சேர்க்கப்பட உள்ளதாக வெளியான தகவலால் அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
மேற்கிந்தியத் தீவுகளின் ஆல் ரவுண்டரும், அதிரடி ஆட்டக்காரருமான பொல்லார்டு உலக கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியில் இடம்பெறவில்லை. 2 முறை உலக கோப்பையை வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணியில் ரசல் மற்றும் பிராத்வெய்ட் ஆகிய ஆல் ரவுண்டர்கள் இடம்பெற்றுள்ளனர்.
ரசலும், பிராத்வெய்ட்டும் சிறப்பான ஆட்டத்தை உலக கோப்பையில் வெளிப் படுத்துவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்த இருவரையும் ஒப்பிடும் போது பொல்லார்டு மிக அனுபவ வாய்ந்த வீரர். எனவே அவரும் அணியில் இடம் பெற்றால் நல்லது என்ற கருத்துகள் தற்போது எழத் தொடங்கி உள்ளன.

பொல்லார்டு அதிரடி
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி நிரூபித்துள்ளார் பொல்லார்டு. அவரது ஆட்டத்திறனை கண்டு மேற்கிந்தியத் தீவுகளின் கிரிக்கெட் வாரிய தேர்வுக்குழு தங்களது முடிவை மாற்றி பொல்லார்டை உலக கோப்பை அணியில் சேர்க்கும் முடிவில் உள்ளதாக கூறப்படுகிறது.

அறிவிப்பு வெளியாகும்
இந்த முடிவை தேர்வுக்குழு விரைவில் உறுதி செய்து அதிகாரபூர்வமாக அறிவிக்கும் என்று தெரிகிறது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அனுமதியின்றி மே 23 வரை உலகக் கோப்பை அணிகள் தங்களது அணி மாற்றத்தை செய்து கொள்ளலாம்.

பாகிஸ்தானுடன் மோதல்
மே 30ம் தேதி தொடங்கவுள்ள உலக கோப்பை தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகள் மோதுகின்றன. மேற்கிந்தியத் தீவுகள் அணி மே 31ம் தேதி தனது முதல் தகுதிச் சுற்றில் பாகிஸ்தானை எதிர் கொள்கிறது.

101 ஒருநாள் போட்டிகள்
பொல்லார்டு கடைசியாக சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 2016ம் ஆண்டு விளையாடினார். 101 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 25.76 சராசரியுடன் 2,289 ரன்களை குவித்துள்ளார். அதிகபட்சமாக ஒரு போட்டியில் 119 ரன்களை குவித்துள்ளார். ஆல் ரவுண்டரான அவர் 39.12 சராசரி மற்றும் 5.74 எகானமி ரேட்டுடன் 50 விக்கெட்டுகளை சாய்த்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications